15,000ஐ கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை
New Delhi: சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் ஏறத்தாழ 1,60,000 பேர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக 15,712 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 507 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,329 பேர் தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில், முழு முடக்க(lockdown) நடவடிக்கையில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களில் அரசின் பங்கு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஏப்ரல் 20க்கு பிறகு தொற்று பாதிப்புகள் இல்லாத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் கூறியிருந்தார். அது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தேசிய தலைநகரில் செயலகத்தின் வடக்குத் தொகுதியில் உள்ள COVID-19 கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டினை அமித் ஷா மறுஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் சங்கிலி குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கப்பட்டது.
- இந்தியா முழுவதும் மக்கள் பரவலாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த விகிதமானது முறையே, கடந்த செவ்வாய்க்கிழமை 9.99 சதவிகிதமாகவும், புதன்கிழமை 11.41 சதவிகிதமாகவும், வியாழக்கிழமை 12.02 சதவிகிதமாகவும், வெள்ளிக்கிழமை 13.06 சதவிகிதமாகவும், நேற்று 13.85 சதவிகிதமாகவும், இன்று காலை நிலவரப்படி 14.20 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்தமாக தேசிய அளவில் தற்போது வரை 2,231 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 12 மாநிலங்களைச் சேர்ந்த 22 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என புதியதாக யாரும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி லாவ் அகர்வால் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
- நேற்றை நிலவரப்படி தேசிய அளவில் பதிவான கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்ட 14,378 பேரில் 29.8 சதவிகிதத்தினர் அதாவது, 4,291 பேர் கடந்த மாதம் டெல்லி நிஜாமுதினில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடையவர்களாவார்கள். என்றும் லாவ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் 3,600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியாகும் உள்ள தாராவியில் நேற்று வரை 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட மும்பை நகரத்தில் கிட்டதட்ட 8 லட்சம் பேர் வசிக்கக்கூடிய பகுதியாக தாவராவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இதே போல தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பரவலின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. 1,800க்கும் அதிகமானோர் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 42 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், சமூக விலகலைக் கடைப்பிக்காததன் விளைவுகள் குறித்து நேற்று விளக்கியிருந்தார். டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் சமூக விலகலை பின்பற்றாததே என்றும், இந்த தொடர் பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
- இதேபோல கொரோனா தொற்றால் பாதிப்பை சந்தித்து வரக்கூடிய மற்றொரு மாநிலம் உத்தரப் பிரதேசமாகும். இங்கு 950க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் கௌதம் புத்த நகரில் பாதிப்பு அதிகப்படியாக உள்ள நிலையில் மாநிலத்தின் உயர் மருத்துவ அதிகாரி ஒருவர் சமீபத்தில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளார். நொய்டா-கிரேட்டர் நொய்டா இந்த இரட்டை நகரங்கள் கௌதம புத்த நகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை பொறுத்த அளவில் கொரோன தொற்றுக்கு 300க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இறந்துள்ளனர். இதுவரை 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ராஜோரி மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்னர் கடந்த 10 நாட்களில் புதியதாக யாரும் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்படவில்லை.
- பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கைகள் தட்டி உற்சாக மூட்டுமாறு மக்களை முன்னதாக கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், யதார்த்த நிலவரத்தில் துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. நேற்று மத்தியப் பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது கோடாரி கொண்டு ஒரு கும்பல் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதேபோல இம்மாத தொடக்கத்தில் இந்தூர் பகுதியில் உள்ளூர் கும்பல்களால் சுகாதார பணியாளர்கள் மற்றும் குடிமை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்கீரின் செய்ய சென்றிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் இரண்டு மருத்துவர்களும் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை மட்டும் பீகார் மாநிலம் முழுவதும் சுகாதார ஊழியர்கள் மீது இதுபோன்ற நான்கு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
- மே முதல் வாரத்தில் தேசிய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், பின்னர் குறையும் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- கடந்த ஆண்டின் இறுதியின் தொடக்கத்தில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. பின்னர் இந்த தொற்று சர்வதேச அளவில் பரவி 20 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்திருக்கின்றது. உலக வல்லரசு நாடனா அமெரிக்கா இந்த தொற்றால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் உயிரிழப்புகள் அதிகம் கொண்ட நாடாக அமெரிக்கா விளக்குகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே மந்த நிலையிலிருந்த உலக பொருளாதாரம் இந்த கொரோனா பாதிப்பால் கடுமையான மந்தநிலையையாக(severe recession) உருமாறும் என சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார். தற்போதைய நெருக்கடி பல வளர்ந்து வரும் சந்தைகளில், கொள்கை தொகுப்பாளர்களுக்கு "அச்சுறுத்தும் சவால்களை" ஏற்படுத்தியுள்ளது என்றும் ஜார்ஜீவா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவைப் பொருத்த வரையில் 2021-22 காலக்கடங்ககளில் வளர்ச்சி 7.4 சதிவிகிமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார். முன்னதாக இந்தியாவின் வருங்கால வளர்ச்சி என்பது 1.5-2.8 சதிவிகம் என்ற அளவில்தான் இருக்கும் என உலக வங்கி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.