இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் காரணமாக 200 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். (கோப்பு)
New Delhi: சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தினை கடந்துள்ளதையடுத்து. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 909 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். தற்போது அமலில் இருக்கும் முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கை மேலும் சில நாட்களுக்குத் தொடரலாம் என இந்த காணொளி காட்சி கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் 13 முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடலுக்குப் பின்பு மத்திய சுகாதார அமைச்சகம் மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரத்தினை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் எனப்படும் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் பிரதமர் இந்த முழு முடக்க நடவடிக்கையினை 21 நாட்களுக்கு அறிவித்திருந்தார். தற்போதைய சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை நீட்டிக்க வாய்ப்பிருக்கும் பட்சத்தில், பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு புதியதாக வகுக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகளையும் அரசு கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- தேசிய அளவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பிரதமர் தலைமையில் , ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், மற்றும் இதர அமைச்சர்கள் இதற்கான முன்னெடுப்பு ஆயத்த பணிக்காகத் திங்கட்கிழமை முதல் தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளன.
- ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்கள் இந்த மாத இறுதி வரை முழு முடக்க நடவடிக்கையை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதே போலப் பீகார் மாநிலம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் மாநிலத்தில் முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்க எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், கிராமப்புற கட்டுமானம் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் தொடர இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்கள் போலவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தங்களது மாநிலத்திலும், முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்க ஆட்சேபனை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவில் இந்த முழு முடக்க நடவடிக்கை அமலாக்கப்படவில்லையெனில், தற்போதைய எதிர்பார்ப்பின்படி ஏப்ரல் 15 தேதி வரை ஒட்டு மொத்தமாகத் தேசிய அளவில் 8.2 லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மேலும், இந்த எண்ணிக்கை ஏப்ரல் 11-ல் 2.08 லட்சத்திலிருந்து 41 சதவிகிதம் அதிரடியாக உயர்ந்து 8.2 லட்சத்தினை தொட்டிருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரியான லாவ் அகர்வால் ஒரு கலந்துரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.
- தேசிய அளவில் கொரோனா தொற்று பரவல் மையத்தினை(hotpot) கண்டறிந்து அதை முற்றிலுமாக மூடி சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில், மூன்று புதிய தொற்று பரவலுக்கான மையத்தினை சுகாதாரத் துறை கண்டறிந்து சீல் வைத்துள்ளது. டெல்லியில் இவ்வாறு இதுவரை கண்டறியப்பட்ட தொற்று பரவல் மையங்களின் எண்ணிக்கை 33 ஆகும். மகாராஷ்டிராவுக்குப் பிறகு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்ட நகரமாக டெல்லி உள்ளது. தேசிய அளவில் இரண்டாவதாக உள்ள டெல்லியில் 1069 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- “பல வளர்ந்த நாடுகளை விட நாம் முன்னெச்சரிக்கையாக உள்ளோம். நாம் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் முழு முடக்க நடவடிக்கையுடன் சிறப்பாக செயல்படுகின்றோம். இந்த நிலையில், இப்போது இந்த நடவடிக்கை இடை நிறுத்தப்படுமானால், இதுவரை பலப்படுத்திய சுகாதார கட்டமைப்பினை நாம் இழக்க நேரிடும்.” என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை ட்விட் செய்திருந்தார்.
- மகாராஷ்டிராவின் மும்பையில், கொரோனா தொற்று பரவல் மையம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தாஜ்மஹால் அரண்மனை மற்றும் தாஜ்மஹால் டவர்ஸ்லிருந்து மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். விமான போக்குவரத்து நிறுவனமாக இண்டிகோ, தனது ஊழியர்களில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது.
- ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியான மும்பை தாராவியில், சனிக்கிழமையன்று ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5 சதுர கி.மீ பரப்பளவில் 1 மில்லியன் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் இதுவரை 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இம்மாநிலத்தில் இதுவரை தொற்றுக்கு 36 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 27 பேர் இந்தூர் நகரத்தினை சேர்ந்தவர்களாவார்கள். கடந்த ஆண்டு தேசிய அளவில் தூய்மையான நகரங்களில் இந்தூர் மூன்றாவது இடத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச அளவில் அமெரிக்கா கொரோனா தொற்றால் பெரிய அளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. 20,000 பேர் இதுவரை அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். அதே போல ஐரோப்பா கண்டமும் பெரும் இழப்பினை சந்தித்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் 19,468 பேர் உயிரிழந்துள்ளனர்.
- அமெரிக்காவில் 40 க்கும் அதிகமான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டில் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், 1,500 க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.