India Coronavirus Cases: கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது!
New Delhi: கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 50,000ஐ நெருங்கியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, மெக்சிக்கோ, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, இந்தியா தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. அதேபோல், உலகளவில் பாதிப்பு அதிகமுள்ள மூன்றாவது நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 740 பேர் உயிரிழந்துள்ளனர், 49,310 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் பல வல்லுநர்கள் கூறும்போது, சோதனை அளவுகள் குறைவாக இருக்கும்போதே, உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தொற்றுநோயின் அளவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட மோசமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரின் ஆய்வில், தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட கால் பகுதியினருக்கு இந்த வைரஸ் இருப்பதாக தெரியவந்துள்ளது - இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 40 மடங்கு அதிகமாகும்.
உலகில் மிகவும் கடுமையான கட்டுபாடுகளுடன் கூடிய லாக்டவுனை கடந்த மார்ச் மாதம் அரசு அறிவித்தது. எனினும், பொருளாதார தாக்கத்தை குறைக்கு இந்த கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டது.
பெங்களூர், பீகார், மேற்குவங்கம், காஷ்மீர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பெருநகரங்களில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
கொரோனா வைரஸை பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கேரளாவில் தற்போது, பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், மீண்டும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.