கட்டுப்பாட்டு மண்டலங்களில் மக்கள் இயக்கம் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து தடைசெய்யப்படும்
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த இரண்டாவது முழு முடக்க நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை தற்போது சில தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவில் கொரோனா தொற்றால் மூன்றாவது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில், சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்றும், டெல்லி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது, மக்கள் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று குறிப்பிட்டிருந்தார். டெல்லியில் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்தும், கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். சில மாநிலங்களில் மதுபானக்கடைகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சமூக விலகல் மற்றும், பிற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இவைகள் செயல்படுகின்றன.
பச்சை மண்டலங்களில் வாகன போக்குவரத்தில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. காரில் ஓட்டுநருடன் ஒருவரும், இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தளர்வுகள் அனுமதிக்கப்படும். அதன் பிறகு அவசியமற்ற போக்குவரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியை பொறுத்த அளவில், சிறு கடைகள், குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள கடைகள். என அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்ப வல்லுநர்கள், பிளம்பர்ஸ், எலக்ட்ரீசியன் போன்ற சுயத் தொழில் செய்பவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
- நாட்டில் கொரொனா தொற்று அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவை பொறுத்த அளவில், கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர, மற்ற கொரோனா பாதித்த பகுதிகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளுக்கும், இரு பயணிகளுடன் டாக்சிகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் டெலிவரி செய்ய இணைய வழி விற்பனையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் தற்போது இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தினை மக்கள் கவனிக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றுக்கு எதிரான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம், இதில் நாம் நிச்சயம் வெற்றியடைவோம் என நேற்று குறிப்பிட்டிருந்தார்.
- கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பை, தானே, புனே மற்றும் போபால் போன்ற நகரங்களுக்கு மத்திய அரசு தனது குழுக்களை அனுப்பியுள்ளது. இந்த குழுவானது தொற்று பரவல் காரணங்களைக் கண்டறிந்து கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்த உள்ளூர் மருத்துவக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும்.
- கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள முழு முடக்க நடவடிக்கையானது பொதுதளங்களில் எவ்வாறு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்குமாறு இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல தளர்வுகளில் குறிப்பிட்டுள்ள “இடைவெளி விட்டு திறக்கப்படும் கடைகளுக்கான“ வரையறை குறித்த சந்தேகங்களை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு எழுப்பியுள்ளது.
- உத்தரப் பிரதேச மாநிலத்தினை பொறுத்த அளவில், மதுபானக் கடைகளுக்கும், இதர தொழில்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஷிப்ட்களுக்கு இடையில் ஒரு மணிநேரம் இடைவெளி அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தில் பச்சை மண்டலங்களில் 50 சதவிகித பயணிகளுடன் போக்குவரத்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஒடிசா மாநிலம், மாநிலத்தின் அனைத்து மண்டலங்களிலும் ஆரோக்ய சேது செயலியின் பயன்பாட்டினை 100 சதவிகிதம் உறுதபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
- கேரள மாநிலத்தில், அரசு அலுவலகங்கள் குழு ஏ மற்றும் பி ஊழியர்கள் 50 சதவிகிதத்துடனும், குழு சி மற்றும் டி ஊழியர்கள் 33 சதவிகித வருகையுடனும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பச்சை மண்டலங்களில், கடைகள் ஞாயிற்றுக் கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்களும் காலை 7 மணி முதல் மாலை 7:30 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 40 ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 42,533ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,373 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 2,553 பேர் தொற்றால் புதியதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.