இந்தியாவில் 1 கோடியை கடந்தது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்!
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் இதுவரை 1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,80,596 பேருக்கு சோதனை
- கடந்த ஐந்து நாட்களில் முறையே 10 லட்சம் மாதிரிகள் சோதனை
New Delhi: இந்தியாவில் மொத்தமாக 6,97,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றை கண்டறிய நாட்டில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,80,596 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக 1,00,04,101 மாதிரிகள் இதுவரை சோதிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 14 நாட்களில், சராசரியாக 2.15 லட்சம் (2,15,655), சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஐந்து நாட்களில் முறையே 10 லட்சம் மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
சோதனைத் திறனை அதிகரிக்கும் முயற்சியாக, பொது (788) மற்றும் தனியார் துறை (317) என இரண்டிலும் சுமார் 1,105 கொரோனா சோதனை ஆய்வகங்களுக்கு இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகங்கள் (592); ட்ரூநாட் லேப்ஸ் (421) மற்றும் சிபிஎன்ஏடி லேப்ஸ் (92) ஆகும்.
கொரோனா உத்திகள் குறித்த ஐசிஎம்ஆரின் சமீபத்திய ஆலோசனையில் கூறும்போது "கொரோனாவுக்கான அளவீட்டு சோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்துகிறது. தொற்று பரவாமல் தடுப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் ஒரே வழி சோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை மட்டுமே என்பதால், இது கட்டாயமாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து அறிகுறி நபர்களுக்கும் சோதனை பரவலாக கிடைக்க வேண்டும், மேலும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்புத் தடமறிதல் வழிமுறைகள் மேலும் பலப்படுத்தப்படுகின்றன, என்று "கூறப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மூலம் எங்கள் சோதனை திறன் ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுவரை, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, மற்றும் கர்நாடகா ஆகிய நாடுகளின் சோதனை வேகத்தை அதிகரித்த முதல் ஐந்து மாநிலங்களாக உள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏழு லட்சத்தை நெருங்க உள்ள சமயத்தில், உலகளவில் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த 24 மணி
நேரத்தில் மட்டும் 24,248 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 425 பேர் உயரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 19,693ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், குணமடைபவர்களின் விகிதமானது 60.85 சதவீதமாக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 4,24,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)