கொரோனா வைரஸ்: கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் இஸ்ரேலும் ஒத்துழைத்து வருகின்றன.
New Delhi: சர்வதேச அளவில் கொரோனா தொற்று பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட முக்கிய மருந்து ஏற்றுமதியை நிறுத்தியது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்து பொருட்களை தங்கள் நாட்டுக்கு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏப்ரல் 3-ம் தேதியன்று நடைபெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலில் கோரிக்கை விடுத்திருந்தார். இஸ்ரேலில் கொரோனா தொற்றுக்கு கிட்டதட்ட 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 86 பேர் உயிரிழந்துள்ளனர். 121 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கோரிக்கையை ஏற்று இந்தியா கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்க பயன்படும் பொருட்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார். இந்த உதவிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் “ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்கியதற்காக என் அன்பு நண்பர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் மக்களின் சார்பாக நன்றி” என ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தார். மருந்து பொருட்கள் இஸ்ரேலை அடைந்து இரு தினங்களுக்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். 5 டன் அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட பல மருந்து பொருட்களை இந்தியா இஸ்ரேலுக்கு அனுப்பியிருந்தது. தற்போது சர்வதேச அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரின் ட்விட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி, “நாம் இந்த தொற்றை கூட்டாக இணைந்து எதிர்த்து போராட வேண்டும். எங்கள் நண்பர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் இந்தியா செய்ய தயாராக உள்ளது. இஸ்ரேல் மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவியது முதல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பிரதமர் மோடியுடன் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த மாதம் 13 அன்று, இஸ்ரேலுக்கு முககவசம் மற்றும் இதர மருந்து பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
தான் மோடியிடம் பேசியதாகவும், இஸ்ரேல் மற்றும் இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்தக தொடர்பில் இருப்பதையும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யாவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததையடுத்து இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கான தனது தடையை இடைநிறுத்தி ஏற்றுமதியை தொடர்ந்தது. இந்த நிலையில் ட்ரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கிடைத்ததற்கு இந்தியப் பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினும் தனது நன்றியை மோடிக்கு தெரிவித்திருக்கிறார்.
கடந்த குடியரசு தின விழாவில் டெல்லியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தற்போது பிரதமர் மோடிக்கு “சரியான நேரத்தில் உதவியதற்காக நன்றி” தெரிவித்தார். "இந்த சவாலான காலங்களில் இந்தியா-பிரேசில் கூட்டு முன்னெப்போதையும் விட வலுவானது. இந்த தொற்றுநோய்க்கு எதிரான மனிதக்குலத்தின் போராட்டத்திற்கு பங்களிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது" பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் ஜெய்ர் ட்விட்டிற்கு பதிலளித்திருந்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த கொரேனா தொற்றானது தற்போது சர்வதேச அளவில் பரவி பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பு மருந்தினை கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.