"மக்களுக்கு சேவையாற்றுவதில் விருப்பம்": நிறை மாதத்திலும் பணியாற்றும் செவிலியர்!
ஹைலைட்ஸ்
- நிறை மாதத்திலும் பணியாற்றும் செவிலியர்
- செவிலியர் ரூபா பிரவீன் ராவ், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
- முதல்வர் எடியூரப்பா தொலைபேசி வாயிலாக தன்னை தொடர்பு கொண்டு, பாராட்டினார்
Shivamogga (Karnataka): கொரோனா நெருக்கடி காலத்தில், கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் உள்ள செவிலியர் ஒருவர் நிறை மாதத்திலும் பணியாற்றி வருகிறார்.
காஜனூரு கிராமத்தை சேர்ந்தவரான செவிலியர் ரூபா பிரவீன் ராவ், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது நிறை மாத கர்ப்ப காலத்திலும், தினமும் தீர்த்தஹாலி தாலுகா வரை பயணம் செய்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, தாலுகா மருத்துவமனை பல கிராமங்களால் சூழந்தது. அங்குள்ள மக்களுக்கு எங்களது சேவை கட்டாயம் தேவை.
எனது சீனியர்கள் என்னை விடுமுறை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். எனினும், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் விருப்பம் காரணமாக, தினமும் ஆறு மணி நேரம் பணியாற்றி வருகிறேன் என்றார்.
மேலும், தனது அர்ப்பணிப்புக்காக முதல்வர் எடியூரப்பா தொலைபேசி வாயிலாக தன்னை தொடர்பு கொண்டு, பாராட்டியதாகவும், தொடர்ந்து, ஓய்வெடுக்கும் படி கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள பல முன்னணி பணியாளர்களில் ரூபா பிரவீன் ராவும் ஒருவர் ஆவார்.