This Article is From May 04, 2020

திறந்த சில நிமிடங்களில் மதுக்கடைகளில் குவிந்த நூற்றுக்கணக்கான குடிமகன்கள்!!

மத்திய பிரதேசத்தில் போபால், உஜ்ஜெய், இந்தூர் போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சமூக விலகல் ஏதுமின்றி குடிமகன்கள் குவிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • நாட்டின் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறப்பு
  • நீண்ட நாளுக்கு பின்னர் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் குவிந்தனர்
  • டெல்லியில் நூற்றுக் கணக்கானோர் கூடியதால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன
New Delhi:

டெல்லியில் திறந்த சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான குடிமகன்கள் மதுக்கடைகளில் குவியத் தொடங்கினர். இதனால் அதிர்ந்துபோன மாநில அரசு உடனடியாக கடைகளை மூடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுக்கடைக்கு வந்திருந்த குடிமகன்கள், கைக்குட்டைகளால் முகத்தை மட்டுமே மூடியிருந்தனர். சமூக இடைவெளிகள் எதையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. மே 17-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்படாத இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக வணிக வளாகங்கள் அல்லாமல் தனியாக இருக்கும் மதுக்கடைகளை திறந்து கொள்வதற்கு டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் நூற்றுக்கணக்கான குடிமகன்கள் டெல்லி மதுக்கடைகளில் கூடினர்.

தலைநகரில் இன்று 100 மதுக்கடைகள் திறந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இங்கு 4,500 பேருக்குகொரோனா பாதிப்பு உள்ளது. 64 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

டெல்லியின் அண்டை மாநிலமான அரியானாவில் மதுக்கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை. பஞ்சாபிலும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. 

இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில், ஒரு தெருவுக்குள் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் 5 கடைகள் மட்டுமே திறந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிப்பு இல்லாத இடங்களில் துணிக்கடைகள், மதுக்கடை உள்ளிட்டவை திறந்து கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

உத்தரப்பிரதேசத்தில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து கொள்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கு மதுக்கடைகளால்தான் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அடுத்ததாக ஜி.எஸ்.டி. வரி வசூல் உள்ளது. 

மேற்கு வங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் சுமார் 3,500 மதுக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மதுவுக்கு பெயர்போன புதுச்சேரியில் கடைகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இன்று முதல் இமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களில் மதுக்கடைகள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

.