பெரும்பாலான ஏர்இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. (File)
New Delhi: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் ஒரு வாரத்தில் 13 நாடுகளில் சிக்கியுள்ள 14,800 இந்தியர்களை மீட்க குறைந்தது, 64 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், இந்திய கப்பல் படையை சேர்ந்த 3 கப்பல்கள் கிழக்கு ஆசியா மற்றும் மாலத்தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. விமான நிலையங்கள் மூடல் காரணமாக இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
முதல் நாள் மீட்பு நடவடிக்கையில் 10 விமானங்கள் மூலம், 2,300 இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு விமானங்கள், அமெரிக்கா, குவைத், பிலிப்பைன்ஸ், வங்கதேசம், இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், ஓமன், பெக்ரைன் மற்றும் அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. இதில், அதிகளவிலான ஏர் இந்தியா விமானங்களே இயக்கப்படும் என்று தெரிகிறது.
இரண்டவது நாள் திட்டப்படி, ஒன்பது வெவ்வேறு நாடுகளில் இருந்து, 2,050 இந்தியர்கள் மீட்கப்பட உள்ளனர். மீட்கப்பட்டு வருபவர்கள் சென்னை, கொச்சி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, மற்றும் டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் வந்தடைவார்கள்.
மூன்றாவது நாளில் மத்திய கிழக்கு நாடுகளான ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 13 வெவ்வேறு நாடுகளில் இருந்து, அதே எண்ணிக்கையிலான இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் மும்பை, கொச்சி லக்னோ மற்றும் டெல்லி விமான நிலையங்களை வந்தடைவார்கள்.
நான்காவது நாளில், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் அரபு அமீரகம் உள்ளிட்ட 8 வெவ்வேறு நாடுகளில் இருந்து, 1,850 பேர் மீட்கப்பட உள்ளனர்.
சமூக விலகலை உறுதி செய்வதன் காரணமாக ஒரு விமானத்தில், 200 முதல் 300 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விமானங்களில் ஏறுவதற்கு முன்பாக பயணிகள் தங்களுக்கு காய்ச்சல், இருமல், சர்க்கரை வியாதி அல்லது வேறு ஏதேனும் சுவாச கோளாறுள் உள்ளதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும், அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ் ஜலாஷ்வா உட்பட 3 இந்திய கடற்படை கப்பல்கள் 1000 இந்தியர்களை மீட்டு வர உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவு கடுமையான லாக்டவுனை அமல்படுத்திய இந்தியா கடந்த மார்ச் மாத இறுதியில் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்தது. இதனால், அதிகளவிலான மாணவர்களும், தொழிலாளர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.