ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் 300 தொழிலாளர்கள் கன்டெய்னர் லாரி மூலம் சொந்து ஊருக்கு செல்ல முயன்றனர்.
Mumbai: கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்து வரும் நிலையில் தொழிலாளர்கள் 300 பேர் 2 கன்டெய்னர் லாரிகளில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தெலங்கானா மாநிலத்தில் தொழிலாளர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அரசு தடை ஏதும் விதிக்கவில்லை. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள், அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் 2 கன்டெய்னர் லாரிகளில் சுமார் 300 பேர் ஏறிக் கொண்டனர்.
லாரிகளில் மேம்போக்காக அத்தியாவசிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே 300 தொழிலாளர்கள் நின்று கொண்டனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா வழியாக ராஜஸ்தானுக்கு லாரிகள் சென்றன. இந்த நிலையில் மகாராஷ்டிராவின் எல்லை மாவட்டமாக யவத்மாலில் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர். இதில், அந்த 300 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டார்கள்.
கும்பல் கும்பலாக கன்டெய்னர் லாரிக்குள் இருந்த தொழிலாளர்களைப் பார்த்ததும், அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'பந்தர்கவ்டா சோதனை சாவடியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு டிரைவர் முறையான பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து கன்டெய்னர் லாரிகளில் சோதனை நடத்தினோம். அதில் 300 தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். மற்றபடி லாரியில் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்படவில்லை' என்றார்.
தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.