கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய முடக்க நடவடிக்கையால் விமானத் தொழில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
New Delhi: சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது உயிரிழப்புகளோடு சேர்த்து பொருளாதார இழப்புகளையும் கொண்டு வந்துள்ளது. ஒரு புறம் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மறுபுறம் விமான துறையும், அதனை சார்ந்துள்ள ஊழியர்களின் வாழ்வாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விமான துறையில் தற்போது ஊழியர்கள் கட்டாய விடுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். அல்லது பணி நீக்கம், ஊதியம் பிடித்தம் போன்றவற்றினை எதிர்கொண்டு வருகிறார்கள்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கையை அறிவித்தார். முன்னேற்பாடு இல்லாத இந்த அறிவிப்பானது, அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது, சரக்கு விமானங்களும் சிறப்பு விமானங்களும் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மோடி முன்னதாக பல்வேறு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அதில் முதல்வர்கள் பலர் முழு முடக்க நடவடிக்கை மேலும், இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கடந்த மாதம் விமான போக்குவரத்து நுகர்வு 14.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகச் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்(IATA) குறிப்பிட்டுள்ளது. இது மிக மோசமான சரிவு என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சரக்கு விமானங்கள், கடல் ஹெலிகாப்படர்கள், மருத்துவ பயன்பாட்டு விமானங்கள், மற்றும் சிறப்பு விமானங்களை மட்டுமே சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடிய மோடி, உள்கட்டமைப்பு துறையில் தளர்வு அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில், குறிப்பாகப் பஞ்சாபில் கோதுமை அறுவடைக் காலம் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் அறுவடை சார்ந்த விவசாய துறைக்கும் தளர்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படியாக ஊரடங்கு நடவடிக்கையிலிருந்து தளர்த்தப்படும் துறைகள் குறித்த அறிவிப்பினை மத்திய உள்துறை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் உணவு பதப்படுத்துதல், விமான போக்குவரத்து, மருந்துகள், தொழில்கள், கட்டுமானம் போன்றவை அடங்கும், ஆனால் சமூக விலகல் என்பது வழக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.