இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- டெல்லி அருகே நொய்டாவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது
- ஊரடங்கால் வேலையின்றி வெளிமாநில தொழிலாளர்கள் தவிக்கின்றனர்
- கொரோனாவுக்கு முன் பசி கொன்றுவிடும் என தொழிலாளர்கள் வேதனை
Noida: கொரோனா தாக்கி அழிப்பதற்கு முன்பாக பசி தங்களை கொன்று விடும் என்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஊரடங்கு நீட்டிப்பால் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை.
டெல்லி அருகே நொய்டாவில் கட்டிட தொழில்கள் நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர். இங்கு சூப்பர் வைசராக இருக்கும் திரிபுவன் குமார் என்பவர் கூறுகையில், 'பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை பார்க்கின்றனர். ஊரடங்கால் அவர்களுக்கு வேலை ஏதும் கொடுக்கப்படவில்லை. வேலை இல்லை என்றால் கூலி கிடையாது' என்று தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த புட்டி பாய் என்ற பெண்மணி நொய்டாவில் வேலை பார்க்கிறார். அவர் தனது மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதற்காக இங்கு வேலை பார்க்க வந்தார். ஊரடங்கால் அவரது வாழ்க்கையும் சிக்கலாகியுள்ளது. உணவுக்கு வழியில்லை.
அதே நேரத்தில் அவரது சொந்த ஊரில் விவசாய பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஊரடங்கால் பயிர்கள் நாசமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தொழிலாளர்கள் கொரோனா தங்களை கொல்வதற்கு முன்பாக பசியால் தாங்கள் உயிரிழந்து விடுவோம் என்று வேதனைப்படத் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழிலாளர்களுக்கு கான்ட்ராக்டர்கள் நீண்ட நாட்களுக்கு உணவு அளிக்க முடியாது.
நொய்டா தொழிலாளர்கள் முகாமில் உள்ளவர்களுக்கு ஆதார் அட்டை உள்ளது. ஆனால் அரசின் உதவித் தொகை அவர்களை வந்து இன்னும் சேரவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். தன்னார்வலர்கள், நல்ல உள்ளம் படைத்தவர்கள்தான் அவர்களுக்கு உணவு அளிக்கின்றனர்.
ஊரடங்கால் வெளிமாநில தொழிலாளர்களின் இரவும் பகலும் வேதனையில் கழிகிறது. அடுத்த வேளை உணவு கிடைக்குமா, ஊருக்கு எப்போது திரும்புவது என்பதைப் பற்றித்தான் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.