This Article is From Mar 09, 2020

தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34-ஆக உயர்வு

Coronavirus Update: ஏற்கனவே இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவை மையமாகக் கொண்ட கொரோனா, 90 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் ஒருவர், லடாக்கில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
  • கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை
  • ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 31 பேருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களையும் கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதிதாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், லடாக்கில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கடந்த 5-ம் தேதி கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடர்பான அறியவேண்டிய தகவல்கள்...

1. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

2. எந்தவொரு பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டாலும், முன்னெச்சரிக்கைகள் குறித்து அமைப்பாளர்களுக்கு வழிகாட்டுமாறு சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

3. கொரோனா பாதிப்பைக் கவனத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோலி பண்டிகை, ஆசிய பாதுகாப்பு மாநாடு, பிரதமரின் ஐரோப்பியப் பயணம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

4. நாட்டில் மொத்தம் 30 விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

5. முன்னெச்சரிக்கையாக டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மார்ச் 31-ம்தேதி வரையில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6. சுமார் 211 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆசிய பசிபிக், ஜப்பான், ஹாங்காங். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

7. இறைச்சிகள் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

8. இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா வெட்ப மண்டல நாடு என்பதால், தட்பவெப்பம் 36 டிகிரி செல்சியஸ் மேல் சென்றால் வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளை இதுபோன்ற நெருக்கடி காலகட்டத்தில் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

10. சீனாவின் வுஹான் நகரை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இதனால் 90 நாடுகள் பாதிப்பு அடைந்துள்ளது. வல்லரசான அமெரிக்காவையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா. 

.