சீன சோதனைக் கருவிகள் மிகவும் பிழையான முடிவுகளையே தருகின்றன என்று நாட்டின் மூன்று மாநிலங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டின.
ஹைலைட்ஸ்
- சீனாவிடம் சோதனைக் கருவிகள் வேண்டுமென்று மார்ச் 27ல் அரசு கேட்டது
- ஏப்ரல் 16 ஆம் தேதி கருவிகள் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன
- சோதனைக் கருவிகள் 60% விலையேற்றி அரசிடம் விற்கப்பட்டுள்ளன
New Delhi: கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய சீனாவிலிருந்து ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ்கள் (சோதனைக் கருவிகள்) இறக்குமதி செய்யப்பட்டன. அந்த சோதனைக் கருவிகளில் பரிசோதனை முடிவுகள் சரியாக வரவில்லை என்று பல மாநிலங்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் மூலம் சோதனை செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீன ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ்களை, இந்தியா இரட்டை மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
Real Metabolics என்னும் விநியோகஸ்தரால் இந்திய அரசுக்கு விற்கபட்ட சோதனைக் கருவிகள், மிகவும் விலையேறிளி விற்கப்பட்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஓர் வழக்கு மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 27 ஆம் தேதி, மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ICMR மூலம், சீனாவின் Wondfo நிறுவனத்திடம் 5 லட்சம் ரேப்பிட் சோதனைக் கருவிகளை ஆர்டர் செய்தது. இது குறித்து Aark Pharmaceuticals என்ற நிறுவனத்துடன் ஐசிஎம்ஆர் கையெழுத்திட்ட ஆவணங்கள் NDTV-க்கு கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, சீனாவுக்கான இந்தியத் தூதர், விக்ரம் மிஸ்ரி, சீனாவிலிருந்து 6,50,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் மற்றும் ஆர்என்ஏ எக்ஸ்டிராக்ஷன் கிட்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ட்விட் செய்தார்.
இந்த சோதனைக் கருவிகளை, Matrix என்னும் நிறுவனம்தான், சீனாவிடமிருந்து ஒரு கருவி தலா 245 ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதே நேரத்தில் விநியோகஸ்தர்களான Real Metabolics மற்றும் Aark Pharmaceuticals நிறுவனங்கள், அதே கருவியை மத்திய அரசுக்கு, 600 ரூபாய்க்கு விற்றுள்ளன. இது கிட்டத்தட்ட 60 சதவிகித விலையேற்றமாகும்.
தமிழக அரசும், இதே சோதனைக் கருவிகளை, Matrix நிறுவனத்தின் மூலம் Shan Biotech என்னும் இன்னொரு விநியோகஸ்த நிறுவனம் மூலமாக ஒரு கருவி 600 ரூபாய் என்கிற விகிதத்தில் வாங்கியது. Shan Biotech மற்றும் தமிழக அரசுக்கு மத்தியில் இது தொடர்பாக கையெழுத்தான ஆவணத்தை NDTV கைப்பற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து ரியல் மெடபாலிக்ஸ் நிறுவனம், மேட்ரிக்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்யும் சோதனைக் கருவிகளை விநியோகம் செய்ய தங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது என்றும், தமிழக அரசிடம் இந்த ஒப்பந்தத்தை மீறி ஷான் பயோடெக் மூலம் மேட்ரிக்ஸ் சோதனைக் கருவிகளை விற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போதுதான், நீதிமன்றம், சோதனைக் கருவிகள் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது.
“கொரோனாவால் நாட்டில் மிகப் பெரும் பிரச்னை நிலவி வருகிறது. பெரும் அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்கள், தங்களின் லாபத்தைப் பற்றி மறந்துவிட்டு, பொது நலன் சார்ந்து இயங்க வேண்டும். சோதனைக் கருவிகள், ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து தலா 400 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும்,” என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து NDTV, ஐசிஎம்ஆர் இடம் விளக்கம் கேட்டுள்ளது. இதுவரை எந்தவித பின்னூட்டமும் வரவில்லை.
சீன சோதனைக் கருவிகள் மிகவும் பிழையான முடிவுகளையே தருகின்றன என்று நாட்டின் மூன்று மாநிலங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டின. அதைத் தொடர்ந்து சோதனைக் கருவிகள் மூலம் கொரோனா சோதனை செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தங்கள் நாட்டு சோதனைக் கருவிகளில் தரமில்லை என்னும் வாதத்தை சீனா ஏற்க மறுத்துள்ளது.