கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த மே 25 ஆம் தேதி, இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
ஹைலைட்ஸ்
- மார்ச் 23 முதல் இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்குத் தடை உள்ளது
- மே 25 ஆம் தேதிதான் நாட்டில் மீண்டும் உள்நாட்டு விமான சேவை ஆரம்பமானது
- விமானத் துறை கொரோனா காலக்கட்டித்தில் நெருக்கடியை சந்தித்தது
New Delhi: இந்திய அரசு, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளுடன், அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இரு வழி விமானப் போக்குவரத்தைத் தொடங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் புரி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், சம்பந்தப்பட்ட நாடுகளின் விமான நிறுவனங்கள், இரு நாடுகளுக்கு இடையே, முன்னெச்செரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விமானங்களை இயக்க முடியும்.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளுடனும் ஏர்-பபுள் பாதுகாப்பு நடைமுறைகளோடு விமானப் போக்குவரத்தைத் தொடங்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் புரி கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுடன் ஏர்-பபுள் நடைமுறையை உருவாக்கியுள்ளது.
“ஏர்-பபுள் நடைமுறையை 13 நாடுகளுடன் உருவாக்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து நாடுகள் அதில் அடக்கம்” என்று கூறுகிறார் புரி.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவத் தொடங்கியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த மே 25 ஆம் தேதி, இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மே 25 முதல் இந்திய விமானங்களில், 50 முதல் 60 சதவீதம் வரைதான் இருக்கைகள் நிரப்பப்படுகின்றன.
தற்போதைய சூழலில் விமான நிறுவனங்கள், தங்களின் 45 சதவீத விமானங்களை, உள்நாட்டுப் போக்குவரத்துக்கு இயக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் போடப்பட்ட கட்டுப்பாடுகளை அடுத்து, விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும், நிதிக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கின. இதன் மூலம் சம்பளக் குறைப்பு, ஊதியம் இல்லாத விடுப்பு மற்றும் சிலரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தன நிறுவனங்கள்.