பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு நேற்றே தான் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளர்.
New Delhi: கொரோனா தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் என பிரதமர் மோடி தலைப்புச்செய்தியை மட்டும் அறிவித்துவிட்டு, வெற்றுப் பக்கமாக விட்டுச்சென்றுள்ளார் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதிம்பரம் தெரிவித்துள்ளார். இந்த வெற்று பக்கங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிரப்புவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்றிரவு உரையாற்றினார். அதில் அவர் கூறும்போது,
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதியமைச்சர் விரிவான தகவல்களை வெளியிடுவார் என்று கூறினார்.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு நேற்றே தான் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் மோடி நமக்கு தலைப்புச்செய்தியுடன், வெற்றுப் பக்கங்களையும் கொடுத்துச்சென்றுள்ளார். அதற்கு நானும் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. தொடர்ந்து, அந்த வெற்று பக்கத்தை இன்று நிதியமைச்சர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கிறேன். அரசு பொருளாதார மேம்பாட்டிற்காக அளிக்கும் ஒவ்வொரு கூடுதல் ரூபாயையும் நாம் கவனமாக எண்ணுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், யாருக்கு என்ன கிடைக்கிறது என்பதையும் நாம் கவனமாக ஆராய்வோம். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து தங்களது சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், பசியில் உள்ளவர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நாம் முதலில் பார்ப்போம்.
இந்த பணத்தின் மூலம் மொத்த மக்கள் தொகையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள (13கோடி குடும்பங்கள்) எதனை பெறுகிறார்கள் என்பதையும் நாம் ஆராய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்வீட்டர் பதிவில், இந்த சிறப்பு திட்டமானது நிதி தொகுப்பு மட்டுமல்ல, அது "சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மனநிலையை மாற்றியமைக்கும் விதமாகவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம் என்பது வணிகர்கள், தெருக்கடைக்காரர்கள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள், நேர்மையாக வரி செலுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமானது. இது வெறும் நிதி தொகுப்பு மட்டுமல்ல, சீர்திருத்தத்தை ஏற்படுத்துதல், மனநிலையை மாற்றியமைத்தல் மற்றும் ஆட்சியின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
'தற்சார்பு இந்தியா' என்பது, தனிமைப்படுத்தப்படுவதையோ அல்லது விலகி இருப்பதையோ குறிக்கவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிறந்த வளங்களும், திறமைகளும் உள்ளன. சிறந்த பொருட்களை நாம் உற்பத்தி செய்வோம். இதன் மூலம் நாம் உலகளவில் பலங்களை பெறுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு உலகளாவிய பொருட்களும் #உள்ளூரில் இருந்தே வலிமை பெற தொடங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.