கடைசியாக கடந்த ஏப்.3ம் தேதி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.
- ஏப்ரல்.20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்ப
- இன்றிலிருந்து ஏப்ரல் 20-ம் தேதி வரை தீவிர கட்டுப்பாடுகள் அமல்
New Delhi: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், ஏப்ரல்.20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக நாட்டு மக்களிடம் இன்று காலை உரையாற்றினார். அப்போது அவர் கூறிய சில முக்கிய தகவல்கள், நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். ஊரடங்கால் சிலருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை புரிந்துகொள்கிறேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர்.
சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். 21 நாட்கள் ஊரடங்கு காரணமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமலிருந்திருந்தால், பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
ஏப்ரல்.20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கட்டுப்பாட்டில் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு நாளை அறிக்கை வெளியிடும். மேலும் இன்றிலிருந்து ஏப்ரல் 20-ம் தேதி வரை தீவிர கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏழு விஷயங்களில் உங்களது ஒத்துழைப்பு தேவை என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதில், முதலாவதாக குடும்பத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக, சமூக விலகலை கடைபிடித்து, ஊரடங்கு உத்தரவை பின்பற்றுங்கள். மூன்றாவது, அயுஷ் அமைச்சக பரிந்துரைப்படி, உங்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்யுங்கள். நான்காவதாக, ஆரோக்யா சேது செயலியை தரவிறக்கம் செய்யுங்கள், ஐந்தாவதாக ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள், ஆறாவதாக, உங்களிடன் பணிபுரிபவர்களுக்கு கருணை காட்டுங்கள், அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டாம், கடைசியாக கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் முன்னின்று பணியாற்றும் மருத்தவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள், ஏழை மக்களின் சிரமத்தை எளிதாக்குவதே, எனது முன்னுரிமைகளில் முக்கியமானதாகும்.
பொருளாதார ரீதியாக நாம் பின்னடவை சந்தித்தாலும், உயிர்களை காப்பதே முக்கியமானது. அதனால், ஊரடங்கு நமக்கு ஒரளவு பயனளித்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை ஒழிக்க நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். வளர்ந்த நாடுகளே இதனை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.