Coronavirus Lockdown: 'இன்றைய ஆர்பிஐ அறிவிப்புகள் மூலம் பணப் புழக்கம் அதிகரித்து, கடன் கொடுப்பதும் அதிகமாகும்.'
New Delhi: கொரோனா வைரஸ் பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டுவர இந்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் இன்று தெரிவித்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்பிஐ தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளால், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என்றும் விவசாயிகள், சிறு வியாபாரங்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:
* கொரோனா காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது.
* ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
* 150 ஆர்பிஐ ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
* உலகளவில் பொருளாதார நிலையற்றதன்மை நிலவி வருகிறது.
* 2020ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 1.9% சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
* ஜி-20 நாடுகளில் அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
* கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம்.
* கொரோனா எதிரொலியால் நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
* ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக ஆர்பிஐ வங்கிகளுக்கு போதுமான ரூபாய் நோட்டை அளித்துள்ளது.
* கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது.
*
* 2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
* ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4% சதவீதத்திலிருந்த 3.75. சதவீதமாக குறைக்கப்படுகிறது
* மார்ச் மாதம் ஆட்டோ மொபைல் உற்பத்தி, விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
* தொழிற்சாலைகள் இயங்காததால், நாட்டில் 25% மின்தேவை குறைந்துள்ளது.
* சிறு, குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி, “இன்றைய ஆர்பிஐ அறிவிப்புகள் மூலம் பணப் புழக்கம் அதிகரித்து, கடன் கொடுப்பதும் அதிகமாகும். இந்த நடவடிக்கைகளால் சிறிய வியாபாரங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்குப் பயன் ஏற்படும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.