India COVID-19 Cases: அனைத்து கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற அவை தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஹைலைட்ஸ்
- நாடாளுமன்ற அவை தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,194ஆக அதிகரிப்பு
- திமுக கட்சியை சேர்ந்த டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
New Delhi: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,194ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ காட்சிகள் மூலம் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளார்.
வீடியோ காட்சிகள் மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பல்வேறு சந்திப்புகளை நடத்தி வரும் பிரதமர் மோடி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பிகளின் ஒருங்கிணைந்த பலத்தை கொண்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.
இந்நிலையில், இன்று நடந்த இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சுதீப் பந்தியோபாதே, சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த, எஸ்.சி.மிஸ்ரா, லோக்ஜன்சக்தி கட்சியை சேரந்த சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இந்த வீடியோ காட்சி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியுடனும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனும், ஆலோசித்தார். இதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதீபா பாட்டீல், பிரனாப் முகர்ஜி மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா உள்ளிட்டோருடன் ஆலோசித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 149 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் இதர அடிமட்ட துறைகளை மீண்டும் செயல்பட தொடங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக, படிப்படியாக கட்டுபாடுகளை தளர்த்தும் முடிவில் அரசு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கொரோன பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களும் கேட்டுக்கொண்டாலும் வேலையிழப்புகள், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளிட்டவை குறித்த பெரும் கவலை உள்ளது. அதனால், அனைத்து துறைகளையும் படிப்படியாக தளர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்படாது என்று தெரிகிறது. இதுதொடர்பாக நேற்றைய தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதோ, இல்லையோ அனைத்து கல்வி நிலையங்களிலும் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு பரித்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், மத வழிபாட்டு தளங்களில் மற்றும் மத கூட்டத்திற்கு தடையை நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.