கொரோனா தொற்றால் இதுவரை 71,642 பேர் உயிரிழந்துள்ளனர்
ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 42.04 லட்சமாக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
- அதேபோல 1,016 பேர் உயிரிழந்துள்ளனர்
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 42.04 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,016 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 42,04,614 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 71,642 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,82,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 32,50,429 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பரிசோதனைகளை பொறுத்த அளவில், தற்போது வரை 4,95,51,507 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,20,362 பேரின் மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும், பரிசோதிக்கப்படும் நபர்களில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் விகிதமானது 12.6ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் புதிய கொரோனா நோயாளிகளை பதிவு செய்துள்ளது.