This Article is From Apr 19, 2020

ரயில்கள் மற்றும் விமானங்கள் மே-3க்கு பிறகு இயங்குவதில் சிக்கல்!

அனைத்து விமான நிறுவனங்களும் மே 3 க்குப் பிறகு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்கள் மற்றும் விமானங்கள் மே-3க்கு பிறகு இயங்குவதில் சிக்கல்!

லாக்டவுன் காரணமாக விமான போக்குவரத்து கடந்த மாதம் நிறுத்தப்பட்டது

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் 15,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முழு முடக்க(lockdown) நடவடிக்கையை மே 3 வரை நீட்டித்து அறிவித்தார். இந்த இடைப்பட்ட காலங்களில் அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு சமூக விலகல் அவசியமாக இருப்பதால் மே 3க்கு பிறகு ரயில் மற்றும் விமான போக்குவரத்து இயல்பாக இயங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என தகவல்கள் வந்திருக்கின்றன.

அனைத்து விமான நிறுவனங்களும் மே 3 க்குப் பிறகு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தில் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் கவலை தெரிவித்தாக தகவல்கள் வந்துள்ளன.

மார்ச் 25-ம் தேதி கொரோனா தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமலாக்கப்பட்டது. இதன் காரணமாக ரயி்ல் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயங்குவதை அனுமதிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை மத்திய அரசு சனிக்கிழமை கூறியுள்ளது. முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் மே 4-ம் தேதிக்கு பிறகு சில உள்நாட்டு வழித்தடங்களுக்கும், ஜூன் 1 முதல் சர்வதேச வழித்தடங்களுக்கும் சேவை வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச வான்வழி தடங்கள் திறக்கப்படுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. விமான போக்குவரத்து குறித்து அரசு தனது முடிவினை அறிவித்த பிறகே விமான நிறுவனங்கள் தங்களின் முன்பதிவினை தொடங்க வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முழு முடக்க நடவடிக்கை மே 3 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்து, டிக்கெட்டுக்கான தொகையை எவ்வித பிடித்தமும் இன்றி முழுமையாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. மார்ச் 25-ஏப்ரல் 14 காலகட்டங்களில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச டிக்கெட்டுகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் டிஜிசிஏ குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று நடவடிக்கையின் காரணமாக விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால், விமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தைக் குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் ஊதியம் இல்லாமல் விடுப்பினை கொடுத்துள்ளன.

இண்டிகோ நிறுவனம் தனது மூத்த ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் வரை ஊதிய குறைப்பை அறிவித்துள்ளது. அதேபோல விஸ்டாரா நிறுவனம் மார்ச் மாதத்தில் தனது மூத்த ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வரை ஊதியம் இன்றி கட்டாய விடுப்பு அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 முதல் 30 சதவிகிதம் வரை ஊதியத்தினை குறைத்துள்ளதாகவும், ஏர் இந்தியா மூன்று மாதங்களுக்கு கேபின் குழுவினர் தவிர மற்ற ஊழியருக்கு 10 சதவிகிதம் வரை ஊதியத்தினை குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

.