ஏர் இந்தியாவின் இன்னொரு விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு இன்றிரவு ஐதராபாத் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hyderabad: கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் சிக்கித் தவித்த 118 இந்தியர்கள் மீட்கப்பட்டு அவர்கள், விமானம் மூலமாக ஐதராபாத் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதனால் அங்கிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பல லட்சம்பேர் இந்தியா திரும்புவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளனர்.
முன்னுரிமை அடிப்படையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாள்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு 'வந்தே பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 118 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியாவின் ஏ.ஐ. 1617 விமானம் மும்பை வழியாக ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஏர் இந்தியாவின் இன்னொரு விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு இன்றிரவு ஐதராபாத் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தில் வந்திறங்கும் இந்தியர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது. முதலில் தரையிறங்கும் ஏரோ பிரிட்ஜ் முதற்கொண்டு, வரவேற்பறை வரையில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.
தனிநபர் இடைவெளி முற்றிலுமாக கடைபிடிக்கப்பட்டு பயணிகள் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு வெப்பநிலைமானி மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
20 - 25 பேர் கொண்ட குழுவாக விமான பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அரசின் தனிமைப்படுத்தப்படும் முகாமில் தங்க வைக்கப்படும் அவர்கள், அறிகுறிகள் இல்லாமல் இருப்பின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அங்கும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.