Coronavirus: சீனாவில் சிக்கி தவித்த 76 இந்தியர்கள், மற்ற நாடுகளை சேர்ந்த 36 பேர் என மொத்தம் 112 பேர் மீட்பு
ஹைலைட்ஸ்
- வுஹானில் சிக்கி தவித்த 76 இந்தியர்கள் மீட்பு
- மற்ற நாடுகளை சேர்ந்த 36 பேரையும் இந்திய விமானம் மீட்டது.
- சீனாவுக்கு வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டு
New Delhi: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வுஹான் நகரத்திற்கு மருந்து பொருட்களை ஏற்றிச்சென்ற, இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம், அங்குச் சிக்கித் தவித்த 76 இந்தியர்கள், மற்ற நாடுகளைச் சேர்ந்த 36 பேர் என மொத்தம் 112 பேரை அங்கிருந்து மீட்டு இந்தியா அழைத்து வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பான் கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்தில் வுஹானில் சிக்கியிருந்த இந்தியர்கள் இந்திய விமானப்படையின் விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த சீன அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய விமானப்படையின் விமானம் மூலம் வுஹானில் சிக்கித் தவித்த 112 பேரை மீட்டுள்ளோம். இதில், வங்கதேசம், மியான்மார், மாலத்தீவு, சீனா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மடகாஸ்கர் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 36 பேர் மற்றும் 76 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கொரானா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், முந்தைய முறை செய்யப்பட்டது போலவே, வுஹானில் இருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட 112 பேரும் இந்தியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம், நேற்றைய தினம் 15 டன் மருத்துவ பொருட்களுடன் வுஹானுக்கு சென்றது, இது சீனாவில் கொரோனா வைரஸ் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.
இந்திய விமானப்படையின் சி -17 குளோப்மாஸ்டர் விமானத்தில் 15 டன் மருத்துவ பொருட்கள் முகமூடிகள், கையுறைகள் மற்றும் இந்தியா அனுப்பிய பிற அவசர மருத்துவ உபகரணங்களை எடுத்துச்சென்றது.
முன்னதாக, இந்திய விமானப்படையின் அனுமதி வழங்குவதைச் சீனா வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டது.