This Article is From Feb 10, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு : ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!!

டயமண்ட் எக்ஸ்ப்ரஸ் என்ற கப்பலில் உள்ள இந்திய குழுவினர், மத்திய அரசுக்கும் ஐ.நா. அவைக்கும் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசிடம் உதவி கேட்கும் இந்திய குழுவில் உள்ள பினய் குமார் சர்கார் மற்றும் சக இந்திய ஊழியர்கள்.

ஹைலைட்ஸ்

  • சொகுசு கப்பலில் 160 இந்தியர்கள் ஊழியர்களாக உள்ளனர்
  • கப்பலில் இருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்று இந்தியர்கள் கோரிக்கை
  • 3700 பேர் இருக்கும் கப்பலில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளது
Kolkata:

ஜப்பானின் சொகுசுக் கப்பலான் டயமண்ட் எக்ஸ்ப்ரஸ் கப்பலில், கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 160 பேரை மீட்கக்கோரி அங்குள்ள இந்தியர்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்த கப்பலில் புதிதாக 66 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டயமண்ட் எக்ஸ்ப்ரஸ் கப்பலில் மொத்தம் 160 இந்திய ஊழியர்கள் உள்ளனர். மொத்தம் 3,700 பேருடன் டயமண்ட் எக்ஸ்ப்ரஸ் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அனைவரும் 2 வாரம் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பினய் குமார் சர்கார் என்ற சமையல்காரர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மத்திய அரசு தங்களை மீட்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். 

அந்த வீடியோவில், 'எங்களிடம் யாரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்யவில்லை. பாதிப்படையாத எங்களை தனியாக பிரித்து காப்பாற்ற வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் யாராவது எங்களை காப்பாற்றுங்கள். எங்களுக்கு ஏதும் நேரும் முன்னர் எங்களை காப்பாற்றுங்கள். மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து எங்களை இங்கிருந்து பிரித்து காப்பாற்றுங்கள்' என்று கோரிக்கை வைத்துள்ளார். 
 

ஜப்பான் நாட்டிலிருந்து டயமண்ட் எக்ஸ்ப்ரஸ் என்ற சொகுசுக்கப்பல் கடந்த மாதம் 20-ம்தேதி புறப்பட்டது. அதிலிருந்து ஹாங்காங்கில் பயணி ஒருவர் கடந்த மாதம் 25-ம்தேதி இறங்கினார். அவருக்கு இம்மாதம் 2-ம்தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சொகுசு கப்பலில், மொத்தம் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

ஹாங்காங்கில் இறங்கிய நபர்தான் கொரோனா வைரஸை 3,700 பேர் இருக்கும் டயமண்ட் எக்ஸ்ப்ரஸ் சொகுசு கப்பலில் பரப்பியிருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. 

இதையடுத்து, 2 வாரம் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் கப்பலில் உள்ள அனைவரும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த கப்பலில் உள்ளவர்கள் வரும் 19-ம்தேதிவரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். 

இன்றைக்கு மட்டும் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அவரவர் அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஜப்பான் அரசு செய்து தர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

சொகுசு கப்பலில் கொரோனா நாளுக்கு நாள் பரவி வருவதால் அங்கிருக்கும் 160 இந்திய ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் தங்களை காப்பாற்றக் கோரி அவர்கள் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

உலகளவில் சுமார் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 900-க்கும் அதிகமானோர் இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உயிரை இழந்துள்ளனர். 

.