This Article is From Mar 16, 2020

தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய் கொரோனா வைரஸ்: தமிழக அரசு

தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கொரோன தொற்று என்பது தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய் எனத் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய் கொரோனா வைரஸ்: தமிழக அரசு

சர்வதேச அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தேசிய அளவில் 100க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் இரண்டு பேர் இறந்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கொரோன தொற்று என்பது தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய் எனத் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதில் கொரோனா அறிகுறிகளுடன் வருவோரின் விவரத்தினை அரசிடம் மருத்துவமனை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோன பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் ரத்த மாதிரிகள் உரிய ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. இந்த ரத்த மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்கள் பரிசோதிக்கக்கூடாது என்று அரசாணை குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட இடத்திற்குள் நுழையவோ அங்கிருந்து மக்கள் வெளியேறவோ தடை விதிப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இருப்பதாகவும் இந்த அரசாணை குறிப்பிடுகிறது. தேவைப்படும் பட்சத்தில் ஒரு இடத்தில் அதிகம் பேர் கூடுவதைத் தவிர்க்கவும், வாகன போக்குவரத்தைத் தடை செய்யவும்,  பள்ளி கல்லூரி, வணிக வளாகம் போன்றவற்றினை மூடுவதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்த அரசாணை குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இந்தியா திரும்பியுள்ளவர்களைத் தனிமைப்படுத்தக் கட்டிடங்களை நிர்ணயிப்பதற்கான அதிகாரமும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு திரும்பியவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்கு 104, 044-29510500, 044-29510400, 9444340496, 8754448477  என்கிற எண்களை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

.