Coronavirus in Tamilnadu: "தனித்திருப்போம். விழித்திருப்போம்”
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 26 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்
- இந்தியளவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது
Coronavirus in Tamilnadu: தேசிய அளவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவுகளும், பூட்டுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகின்றது. ஏற்கெனவே 23 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 26 ஆக அதிகரித்துள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா வைரஸை வெறுமனே சுகாதாரப் பேரிடராக மட்டுமல்லாமல் பொருளாதாரப் பேரிடராக அறிவித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஸ்டாலின், வீடியோ மூலம் விளக்கிக் கூறியுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கொரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் இந்த நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதை சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கின்றேன். அதே நேரத்தில் அந்த நடவடிக்கைகள் மட்டும் போதாது. அன்றாடக் கூலிக்காக வேலை செய்யும் ஏழை, எளிய மக்கள், 21 நாட்கள் ஊரடங்கைத் தாங்க மாட்டார்கள்.
அவர்களுக்கு உதவிடும் வகையில் பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். கடன்களைக் கட்டுவதில் காலக்கெடுவைத் தள்ளிவைப்பது, மானியங்கள் அறிவிப்பது, அத்தியாவசியப் பொருட்களை இலவசமாகக் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை 5000 ரூபாய் என உயர்த்தி வழங்கிட வேண்டும்.
எதையும் எதிர்கொள்ளும் வல்லமை நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் அறிவியலுக்கும் உண்டு. தனித்திருப்போம். விழித்திருப்போம்,” என்று காணொளி மூலம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.