This Article is From Aug 21, 2020

‘தமிழகத்தில் இதனால்தான் கொரோனா கட்டுக்குள் உள்ளது..!’- முதல்வர் பழனிசாமி சொல்லும் விளக்கம்

"அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு தொற்று எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது."

‘தமிழகத்தில் இதனால்தான் கொரோனா கட்டுக்குள் உள்ளது..!’- முதல்வர் பழனிசாமி சொல்லும் விளக்கம்

"கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளன"

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் ஒரு நாளைக்கு 5,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு
  • சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1000க்கும் மேல் உள்ளது
  • தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். அப்படி கட்டுக்குள் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.61 லட்சத்தினை கடந்துள்ளது. நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 75,076 மாதிரிகளில் 5,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 22வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,61,435 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 5,742 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,01,913 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 116 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 18வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,239 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,283 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை பற்றி பேசியுள்ள முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு சுமார் 68,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதில் 6,000-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பதாக முடிவுகள் வருகின்றன. இப்படி தொடர்ந்து அதிகளவிலான பரிசோதனைகள் செய்யப்படுவதனால்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. 

அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு தொற்று எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளன. இயல்பு நிலையைக் கொண்டு வர அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்களும் அதற்கு ஒப்புதல் நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

.