This Article is From May 05, 2020

'கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்' - இஸ்ரேல் அரசு அறிவிப்பு

தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இஸ்ரேலின் IIBR ஆய்வகத்திற்கு ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வைரஸ் மாதிரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

'கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்' - இஸ்ரேல் அரசு அறிவிப்பு

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல்
  • விரைவில் தடுப்பு மருந்து சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • காப்புரிமையை பெற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
Jerusalem:

உலகையே நாசம் செய்துவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக மருந்துக்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதிக எண்ணிக்கையில் வர்த்தக நோக்கத்திற்காக உற்பத்தி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. 

கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு நாடுகளும் மருந்து தயாரிப்பில் இறங்கியுள்ளன. இந்திய மருந்து நிறுவனங்களும், தங்களது ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தின. அந்த வகையில் இஸ்ரேலின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரேல் உயிரியல் ஆய்வு நிறுவனம் (IIBR) பல்வேறு சோதனைகளை நடத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நேரில் சென்ற பென்னட், அங்கு விஞ்ஞானிகளுடன் கொரோனா தடுப்பு மருந்து குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். 

தடுப்பு மருந்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆராய்ச்சி நிறுவனம் அதற்கான காப்புரிமையை பெற முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையில் தடுப்பு மருந்தை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆய்வு நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னட் கூறுகையில், 'தடுப்பு மருந்தை கண்டுபிடித்த உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் பணியாளர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். இது மிகப்பெரும் திருப்பு முனையாக அமையப் போகிறது. அவர்களுடன் அறிவாற்றல் இந்த மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்துள்ளது' என்று பாராட்டியுள்ளார். 

அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இஸ்ரேல் இருந்து வருகிறது. அந்நாடு இப்படியொரு அறிக்கையை வெளியிடுகிறது என்றால் நிச்சயமாக கொரோனா தடுப்பு மருந்து நன்றாக வேலை செய்யும் என நம்பலாம் என்று, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் நாளிதழான ஹாரேட்ஸ், கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் முக்கிய கட்டத்தை எட்டி விட்டதாகவும், அதற்கான தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்றும் கூறியிருந்தது. 

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக மனித உடல் பயன்படுத்தப்பட்டதா அல்லது விலங்குகளின் உடலில் செலுத்தை மருந்தை உருவாக்கினார்களா என்பதுபற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்து குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் பார்வையிட்டு வருகிறது. 

முன்னதாக கடந்த பிப்ரவரி 1-ம்தேதி கொரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்குமாறு IIBR க்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

பொதுவாக தடுப்பு மருந்துகள் முதலில் விலங்குகளின் உடலில் செலுத்தப்பட்டு, அதன்பின்னர் பலகட்ட சோதனைகளை தாண்டித்தான் சந்தையில் விற்பனைக்கு வரும். தடுப்பு மருந்தை சில காலத்திற்கு பயன்படுத்தி அதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்படும். 

தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இஸ்ரேலின் IIBR ஆய்வகத்திற்கு ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வைரஸ் மாதிரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

உலகில் பல தனியார் நிறுவனங்கள் கொரோனா மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறி வருகின்றன. ஆனால் அவை நடைமுறையில் எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது உறுதி செய்யப்படவில்லை. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இன்று 2.50 லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது. 36 லட்சம்பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.