தெலுங்கானாவில் சோதனை விகிதம் தேசிய சராசரியை விட அதிகம் என்று ராவ் கூறியுள்ளார்
Hyderabad: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய அளவில் முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதத்தில் அறிவித்திருந்தார். தற்போது இந்நடவடிக்கை மே 3 வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தார். இக்காலகட்டங்களில் பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள், அத்தியாவசியமற்ற அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார நிலைமை ஏற்கெனவே மோசமான நிலையிலிருந்த நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் மேலும் பெரிய அளவில் பாதித்துள்ளது. எனவே இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு ஏப்ரல் 20க்கு பிறகு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இக்காலகட்டங்களில் கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும், இணைய வழி உணவு விநியோகத்திற்குத் தடை நீட்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நாளை முதல் ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ அனுமதிக்கப்படாது என்றும், இதற்கான முடிவினை மாநில அமைச்சரவைக்குழு எடுத்துள்ளதாகவும், மே 5-ம் தேதி நிலைமையை மறுபரிசீலனை செய்ய கள நிலவரங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 858 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ராவ் தெரிவித்துள்ளார். மேலும், வாரங்கல், யாத்ராதி பத்ராட்ரி, சித்திப்பேட்டை, வனபர்த்தி ஆகிய ஐந்து மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாதவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களை விட தெலுங்கானா சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக தெலுங்கானாவில் சோதனை விகிதம் தேசிய சராசரியை விட அதிகம் என்று ராவ் கூறியுள்ளார். காவல்துறை ஊழியர்களின் ஊதியம் 10 சதவிகிதம் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தெலுங்கானாவை தளமாக கொண்ட புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களும், 1,500 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ரேசன் பொருட்கள் மட்டும் வழங்கப்படுகிறது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தொற்று இல்லாத அல்லது மிக குறைந்த அளவில் தொற்று உள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 20க்கு பிறகு சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்றும், ஆனால் நாட்டின் அனைத்து இடங்களிலும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு சமீபத்தில் கூறியிருந்தது. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலுவலகங்கள், அவசர சேவைகளுக்கான தனியார் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்; கூரியர் சேவைகள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு பணிகள் மற்றும் நிதித் துறையும் செயல்பட அனுமதிக்கப்படும் என மத்திய அரசு தளர்வுகளுக்கான வரம்புகளை அறிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த தளர்வுகள் மாநிலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும். அதற்கான முடிவினை மாநில அமைச்சரவை குழு மேற்கொண்டுள்ளது என்றும் ராவ் கூறியுள்ளார்.
With inputs from ANI