பெங்களூரு விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
ஹைலைட்ஸ்
- பெங்களூரில் வெளிநாட்டு பயணிகளுக்கு முத்திரை
- இந்தியாவில் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- கர்நாடகாவில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
Bengaluru: கர்நாடகாவின் பெங்களூர் விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அழியாத மை கொண்டு முத்திரை வைக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கர்நாடக அரசு இதனை மேற்கொண்டுள்ளது. இந்த முத்திரையானது, 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இடது கைகளில் பின்பக்கம் குத்தப்படுகிறது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கையில் அழியாத மை கொண்டு முத்திரை குத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் கிட்டதட்ட 170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குக் கர்நாடகாவைச் சேர்ந்த 76 முதியவர் முதலில் உயிரிழந்தார்.
சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கேரளாவும், மகாராஷ்டிராவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும். இதில், கேரளாவில் 25 பேரும், மகாராஷ்டிராவில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கும், மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கும், விமான நிலையங்களில் வருபவர்களுக்கும் இதேபோன்ற நடவடிக்கையை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலைத் தவிர்த்து பொதுமக்கள் மத்தியில் வருபவர்களை அடையாளம் காண இது உதவும் ”என்று மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்திருந்தார்.