Karnataka Coronavirus Cases: தனது தாயை மருத்துவமனைக்கு வெளியே சந்தித்த சிறுமி
ஹைலைட்ஸ்
- தனது தாயை மருத்துவமனைக்கு வெளியே சந்தித்த சிறுமி
- மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விவரிக்கிறது
- கொரோனாவுக்கு எதிரான அனைவரின் முயற்சிகளுக்கும் முதல்வர் பாராட்டு
Bengaluru: கர்நாடகாவில் கொரோனா பணியில் உள்ள செவிலியருக்கும் அவரது மகளுக்கும் இடையே நடந்த பாசப்போரட்டம் தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை அம்மாநில முதல்வர் எடியூரப்பா பகிர்ந்துள்ளார்.
29 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையை விவரிக்கிறது. அதில், தந்தையின் இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்திருக்கும் அந்த சிறுமி, கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவமனையில் இருக்கும் தனது தாயை பார்த்துவிட்டு கைகளை அசைத்தபடி, கண்ணீர் விடுகிறார்.
கொரோனா போரில் இருக்கும் அந்த சிறுமியின் தாயார் கிட்டதட்ட 15 நாட்களாக வீட்டிற்கு செல்லவில்லை. இதனால், மருத்துவமனை வாயிலில் மகளை பார்த்தவுடன் அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார். எனினும், கண்ணீருடன் இங்கிருந்து செல்லுங்கள் என தனது கணவர் மற்றும் மகளை பார்த்தபடி கை காட்டி விட்டு, கண்ணீருடன் மருத்துவமனைக்குள் திரும்பிச் செல்கிறார்.
மேலும், அந்த வீடியோவில், செவிலியர் சுகுந்தாவிடம் முதல்வர் எடியூரப்பா தொலைப்பேசி வழியாக பேசிய ஆடியோ பதிவும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் உங்கள் குழந்தையை கூட கவனிக்க முடியாமல், கொரோனாவுக்கு எதிராக கடினமாக போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் அதனை தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொண்டேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள்.. வரும் காலங்களில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார். உங்களது கடின உழைப்பு உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று அவர் கூறுகிறார்.
அதற்கு அந்த செவிலியரும் சரி என்று பதில் கூறுகிறார். இதையடுத்து, மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரின் முயற்சிகளுக்கும் முதல்வர் எடியூரப்பா பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
(With inputs from PTI)