இந்த வைரஸ் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வயதானவர்களுக்கு ஆபத்தானது என்று அறியப்படுகிறது
ஹைலைட்ஸ்
- அவர்கள் குணமடைவதை உறுதி செய்ய தேவையான அனைத்தையும்
- 93 மற்றும் 88 வயதுடைய ஒரு வயதான தம்பதியினர்
- "அந்த வயதான தம்பதியினர் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டனர்"
Thiruvananthapuram: கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 93 மற்றும் 88 வயதுடைய ஒரு வயதான தம்பதியினர் இப்போது குணமடைந்துள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலாஜா தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் இத்தாலியில் இருந்து திரும்பிய பேரன் ஆகியோரிடமிருந்து தொற்றுநோயைப் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார். தற்போது அவர்களது குடும்ப நபர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"அந்த வயதான தம்பதியினர் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டனர்" என்றே கூறலாம் என்று சுகாதார அமைச்சர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஏன் என்றால் அந்த தம்பதியினர் ஏற்கனவே நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக வயது தொடர்பான பிற நோய்களைக் கொண்டிருந்தனர் என்று அவர் கூறினார். 93 வயதான முதியவர் கடுமையான இருமல், மார்பு வலி, சிறுநீர் தொற்று மற்றும் இதய பிரச்சனைகளால் பாதிக்கப்படக்கூடியவர் என கண்டறியப்பட்டது. அவரை வென்டிலேட்டரிலும் வைக்க வேண்டியிருந்தது. அவரது மனைவியும் கடுமையான சிறுநீர் மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். இது அவர்களது நிலைமையை மேலும் மோசமாகியது. அவர்கள் குணமடைவதை உறுதி செய்ய தேவையான அனைத்தையும் செய்ய சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வைரஸ் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வயதானவர்களுக்கு ஆபத்தானது என்று அறியப்படுகிறது. ஆகையால் தம்பதியினர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். தம்பதியினர் இருவரும் முதலில் இரண்டு வெவ்வேறு வி.ஐ.பி ஐ.சி.யூ அறைகளில் அனுமதிக்கப்பட்ட போது தம்பதியினர் அமைதியற்றவர்களாகவும் சங்கடமானவர்களாகவும் திகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பார்க்கக்கூடிய வகையில் உள்ள ஐ.சி.யூ அறைக்கு மாற்றப்பட்டனர். அந்த வயதான தம்பதியினர், வீடு திரும்புவதில் பிடிவாதமாக இருந்ததாகவும், உணவைக் கூட மறுத்துவிட்டதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் செவிலியர்கள் அவர்களிடம் பரிவுடனும், அக்கறையுடனும் நடந்து கொண்டனர்.
துரதிஷ்டவசமாக, இந்த போராட்டத்தில் அந்த வயதான தம்பதியினரை தனது குடும்பம் போல பாவித்து சிகிச்சை செய்து வந்த செவிலியர் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கே.கே.ஷைலாஜா அந்த செவிலியரை தனிப்பட்ட முறையில் அழைத்து முழு சுகாதாரத் துறையும் அவருடன் இருப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் இதுவரை 194 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நாட்டிலேயே அதிகமாகும். இந்த வைரஸ் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்து 29 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில், கொரோனா வைரஸால் 7,30,000 க்கும் மேற்பட்ட வழக்குகளும் 34,000 க்கும் மேற்பட்ட இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.