This Article is From Apr 20, 2020

“ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது“ கேரளாவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கேரள மாநிலம் இன்று இரண்டு மண்டலங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்தது. மேலும், இன்று முதல் அனைத்து தனியார் வாகனங்களையும் ஒற்றைப்படை - இரட்டைப்படை அடிப்படியில் இயங்கவும், உணவகங்களில் உணவு உண்ணவும் அனுமதி அளித்துள்ளது.

இரண்டு மண்டலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக கேரளா அறிவித்தது.

ஹைலைட்ஸ்

  • Kerala announced relaxation of lockdown restrictions in two zones
  • Centre has made it clear that states cannot dilute lockdown guidelines
  • Kerala reported 2 COVID-19 cases on Sunday, which takes the total to 401
New Delhi:

ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில், சில துறைகள் இன்று முதல் இயங்கலாம் என அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, விலக்கு அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள அந்த கடிதத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் சில நடவடிக்கைகளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சில மாநிலங்கள் தாங்களாகவே ஒருசில அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு தளர்வு விதித்துள்ளது. இதற்கு அனுமதி இல்லை என்றும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை மேற்கோள் காட்டி அவர் கூறியுள்ளார். 

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை விதி 2005ன் கீழ் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் படி, அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளும் அனுமதி வழங்கக் கூடாது. மத்திய அரசின் எந்தவொரு வழிகாட்டுதலையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, கேரள மாநிலம் இன்று இரண்டு மண்டலங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்தது. மேலும், இன்று முதல் அனைத்து தனியார் வாகனங்களையும் ஒற்றைப்படை - இரட்டைப்படை அடிப்படியில் இயங்கவும், உணவகங்களில் உணவு உண்ணவும் அனுமதி அளித்துள்ளது.

மேலும், உள்ளூர் பட்டறைகள், முடிதிருத்தும் கடைகள், கார்களின் பின் இருக்கையில் இரண்டு பயணிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இருவர் பயணிக்கவும் குறிப்பிட்ட மண்டலங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விற்பனைக்கும், குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்திற்கும் கேரள அரசு அனுமதியளித்துள்ளது. அத்துடன் சிறு குறு தொழில்களுக்கும் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.

கேரள அரசு மாநிலத்தின் அணைத்து மாவட்டங்களையும் மண்டலங்களாகப் பிரித்து தொற்று மிகக் குறைவான மற்றும், தொற்று இல்லாத பகுதிகளில் தளர்வுகளை அனுமதித்துள்ளது. "இது உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்வது மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன் கீழ் ஏப்ரல் 15 தேதியிட்ட உத்தரவை மீறுவதாகும்" என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மத்திய அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுவதை உறுதி செய்திடுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு நடவடிக்கையில் அமலாக்கப்படும் தளர்வுகள் குறித்த திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், விவசாயம் மற்றும் தோட்டக்கலை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும். சுகாதார சேவைகள் (ஆயுஷ் உட்பட) மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படும். மீன்பிடித் தொழில் (கடல் மற்றும் இதர நீர் நிலைகள்) மற்றும் மீன் வளர்ப்புத் தொழில்களும் கால்நடை வளர்ப்புத் துறையைப் போலவே செயல்பட அனுமதிக்கப்படும். தேயிலை, காபி மற்றும் ரப்பர் போன்ற தோட்ட தொழில்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். தேங்காய், மூங்கில், பாக்கு மற்றும் கொக்கோ தோட்டங்கள் போன்ற பணப்பயிர்கள் அறுவடை மற்றும் அது சார்ந்த விவசாயப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். இதனுடன் சேர்த்து பழங்குடியினரின் வழக்கமான உற்பத்தியும் அனுமதிக்கப்படும் என மத்திய அரசின் திருத்தப்பட்ட பட்டியல் கூறியுள்ளது.

இத்துடன் மத்திய மாநில அரசு அலுவலகங்கள், மத்தமா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டங்கள், அவசர சேவைகளுக்கான தனியார் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்; கூரியர் சேவைகள் போன்றவற்றிற்குத் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

நாட்டில் கொரோனா தொற்று முதலில் கேரளாவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் கொரோனா தொற்று பரவுதல் தடுப்பு விகிதம் மற்றும் இறப்பு தடுப்பு விகிதங்களில் கேரளா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மற்ற மாநிலங்களைப் பொறுத்த அளவில் இறப்பு விகிதம் வெகுவாக கேரளாவில் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 402 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 270 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தற்போது 129 பேர் மட்டும் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.