20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியுள்ளதால், உலகளாவிய கவலையை இந்த கொரோனா ஏற்படுத்தியுள்ளது.
Beijing: கொரோனா நோய் தொற்று நாளுக்குநாள் சீனாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. தற்போது சீனாவில் மட்டும் சுமார் 560 பேர் இந்த கொரோனா நோய் தொற்றால் இறந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழன் அன்று மட்டும் 70 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் புதிதாக 2,987 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதாரத்தை அவசர நிலைக்குக் கொண்டுவந்துள்ள இந்த கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபே தலைநகர் வுஹானின் உள்ள ஒரு சந்தையில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் WHO எனப்படும் உலக சுகாதார அமைச்சகத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பரவி வரும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்திற்காக 675 மில்லியன் டாலரை நன்கொடையாக கேட்டுள்ளார்.
வுஹான் நகரில் உள்ள ஹு லீஷன் என்னும் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்களும், நோயாளிகளுக்கான படுக்கைகளும் குறைவாக உள்ளதாகக் கூறினார். மேலும் அருகில் பொது பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியுள்ளதால், உலகளாவிய கவலையை இந்த கொரோனா ஏற்படுத்தியுள்ளது.