Read in English
This Article is From Apr 21, 2020

சொந்த ஊருக்கு 150கி.மீ நடந்தே சென்ற 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

150 கி.மீ நடந்தே சென்ற 11 பேர் கொண்ட புலம் பெயர் தொழிலாளியின் குழுவிலிருந்த 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisement
இந்தியா ,

சிறுமி கடுமையாக நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டிருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Bijapur, Chhattisgarh:

தேசிய அளவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு முடக்க நடவடிக்கை மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14 வரை அறிவித்திருந்த இந்த நடவடிக்கை தற்போது மே 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் அவர்கள் நடந்தே பல நூறு மைல்களை வெறும் கால்களில் கடந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக இன்று தெலுங்கானாவிலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்திற்கு 150 கி.மீ நடந்தே சென்ற 11 பேர் கொண்ட புலம் பெயர் தொழிலாளியின் குழுவிலிருந்த 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெலுங்கானாவில் மிளகாய் தோட்டங்களில் பணிசெய்து வந்த 11 பேர் ஏப்ரல் 15 அன்று தங்களது சொந்த மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்திற்கு நடக்கத் தொடங்கினர். அவர்கள் நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து காடு மற்றும் இலகுவான வழிகளை நடக்கத் தேர்ந்தெடுத்தனர். இந்த நிலையில் இந்த குழுவில் பயணித்த ஜாம்லோ மக்தாம் என்கிற 12 வயது சிறுமி அவரது வீட்டிற்கு சென்று சேருவதற்கு முன்பே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இறுதியாக அவரது வீட்டிற்கு 14 கி.மீ முன்னதாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிணியூர்தியில் வீட்டிற்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கடுமையாக நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டிருந்ததாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்கிறபோதும், சிறுமியின் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையற்ற தன்மையிலிருந்திருந்ததாகவும் மாவட்ட மூத்த மருத்துவ அதிகாரி பி.ஆர்.புஜாரி கூறியுள்ளார்.

சிறுமியின் தந்தை அந்தோரம் மட்கம், சிறுமி மூன்று நாட்களாக 150 கி.மீ நடந்து வந்ததன் விளைவாக வாந்தி மற்றும் வயிற்று வலியினால் அவதிப்பட்டதாகக் குறிப்பிட்டார். சிறுமி சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்று 11 பேர் கொண்ட குழு தெரிவித்திருக்கிறது.

Advertisement

இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு மாநில அரசு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் தாங்கள் பணி செய்த நகரங்களை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். தேசிய அளவில் முறை சாரா தொழிலாளர்களே பெரும்பான்மை. இந்த நிலையில் ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவு மிக மோச மாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் மீண்டு எழாத வகையில் முற்றிலும் முடங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவின் வருங்கால வளர்ச்சி என்பது 1.5-2.8 என்கிற அளவில்தான் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முழு முடக்க நடவடிக்கை என்பது எவ்வித முன் ஏற்பாடுகளும் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.

ஏப்ரல் 5, 2020 அன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மாநிலங்களுக்கிடையே குடியேறி  சுமார் 12.5 லட்சம் மக்கள் 27,661 நிவாரண முகாம் மற்றும் தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Advertisement

இவர்களுக்கான உணவு, மற்றும் வருவாய் மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக நாடு முழுவதும் 18,601 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 590 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement