வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு செல்ல மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Indore: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் லக்னோவுக்கு சிமென்ட் மிக்சர் லாரி வழியே செல்ல முயன்ற 18 தொழிலாளர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் சிமென்ட் மிக்சர் செய்யும் உருளைக்குள் இருந்து வெளியே வரும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மத்தியபிரதேச நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. சிமென்ட் மிக்சர் லாரி மத்திய பிரதேசத்தின் இந்தூர் - உஜ்ஜெய்ன் மாவட்டத்தின் இடையே சென்று கொண்டிருந்தபோது, அதனை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, போலீசார் கேட்ட கேள்விகளுக்கு டிரைவர் அளித்த பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிமென்ட் மிக்சர் செய்யும் பெரிய உருளைக்குள் போலீசார் சோதனை நடத்தினர். இந்த உருளைக்குள்தான் சிமென்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்டவற்றை போட்டு கான்கிரீட் பணிகளுக்காக தொழிலாளர்கள் மிக்சிங் செய்வார்கள்.
அதனை திறந்து பார்த்தபோது உள்ளேயிருந்து புற்றீசல் போல தொழிலாளர்கள் வர ஆரம்பித்தனர். இந்த சம்பவம் போலீசாருக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொழிலாளர்கள் உருளையில் இருந்து வெளியேறும் காட்சிகள் இணையத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றன.
'எத்தனை பேர் வந்தீர்கள்?. உருளைக்குள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?' என்று போலீசார் கேட்க, தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வந்து வெளியே குதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது வெளி மாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக மத்திய பிரதேச அரசு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரும், அரசும் என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு சிலர் சொந்த ஊருக்கு கிளம்பி விடுகின்றனர். நாடு முழுவதும் மே 17-ம்தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலையின்மை, பசிக்கொடுமையால் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று காலை மத்திய பிரதேசத்தின் பர்வானியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு சைக்கிளில் செல்ல முயன்றவர் உயிரிழந்துள்ளார். அவர் 10 நாட்களாக சைக்கிளை மிதித்தவர்.
கடந்த வாரம் அரியானாவில் இருந்து பீகாருக்கு சரக்கு லாரியில் சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செல்ல முயன்ற 94 வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பிடிபட்டனர். வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு செல்ல மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், இதற்காக ரயில்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.