This Article is From May 18, 2020

லாக்டவுன் 4: மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - மத்திய அரசு!

இந்நிலையில் மத்திய அரசு வழிகாட்டும் தளர்வுகளைத் தவிர்த்து வேறு எந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தக் கூடாது என்று தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லாக்டவுன் 4: மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - மத்திய அரசு!

Lockdown 4: 'கட்டுப்பாடு தளர்வு வழிகாட்டுதல்கள் இல்லாத பிற விஷயங்களுக்கு தடை விதிக்க வேண்டும்'

ஹைலைட்ஸ்

  • மே 31 ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது
  • இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
New Delhi:

நாடு முழுவதும் வரும் மே 31 ஆம் தேதி வரை, கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முழு முடக்க உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்படும் இந்த முழு முடக்க உத்தரவில், பல கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்நிலையில் மத்திய அரசு வழிகாட்டும் தளர்வுகளைத் தவிர்த்து வேறு எந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தக் கூடாது என்று தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள லாக்டவுன் 4-க்கான கட்டுப்பாடுத் தளர்வுகளைத் தவிர்த்து, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கட்டுப்பாடு தளர்வுகளை அறிவிக்கக் கூடாது. கட்டுப்பாடு தளர்வு வழிகாட்டுதல்கள் இல்லாத பிற விஷயங்களுக்கு தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவற்றுக்கு அதிக விதிமுறைகள் விதித்து முடக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளது.  

மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர், அஜய் பால்லா எழுதியுள்ள கடிதத்தில், “நான் முன்னர் அனுப்பிய கடிதங்களிலேயே, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறக் கூடாது என்று சுட்டிக்காட்டியிருந்தேன். எனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார். 

புதிய கட்டுப்பாடு விதிமுறைகளின்படி, கொரோனா பாதித்த மண்டலங்களை பிரிவுகளாக பிரிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டங்களை சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக பிரிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கன்டெயின்மென்ட் மண்டலங்களை வகைப்படுத்தும் உரிமை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கன்டெயின்மென்ட் மண்டலங்களில் தொடர்ந்து 28 நாட்களுக்கு எந்தவித கொரோனா பாதிப்பும் இல்லையென்றால், அந்தப் பகுதி கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்படும். 

மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது 3வது முறையாக அது நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

.