This Article is From May 18, 2020

பேருந்துக்காக இரவிலிருந்து 1.5 கி.மீ தூரத்திற்கு காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

Coronavirus Lockdown: கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடித்து ஒரு பேருந்துக்கு 22 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பேருந்துக்காக இரவிலிருந்து 1.5 கி.மீ தூரத்திற்கு காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

ஹைலைட்ஸ்

  • 1.5 கி.மீ தூரத்திற்கு காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!
  • ஒரு பேருந்துக்கு 22 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
  • மகாராஷ்டிராவின் தானே பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்
Thane:

மகாராஷ்டிராவின் தானே பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊர் செல்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் பேருந்துக்காக இரவு முதல் காத்திருந்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடித்து ஒரு பேருந்துக்கு 22 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

இதனால், தானேவில் 1.5 கி.மீ தூரத்திற்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் கால் கடுக்க தங்களது பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.  

இதுதொடர்பாக அங்கிருந்த ஒரு புலம்பெயர் தொழிலாளியிடம் பேசியபோது, நேற்றிரவு 10 முதல் இங்கு தான் காத்திருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் சில மீட்டர்கள் மட்டுமே வரிசை நகர்ந்துள்ளது. நான் ஜான்பூர் செல்ல வேண்டும். எனக்கு மத்திய பிரதேசம் செல்வதற்கு பேருந்துகள் இல்லை. 

அதனால், எல்லையில் நான் இறக்கி விடப்படுவேன். அங்கிருந்து, அடுத்த மாநில அரசு எனது கிராமத்திற்கு செல்ல எனக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று அவர் கூறினார். 

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது பேருந்துக்காக வரிசையில் நிற்பதற்கு முன்பு, தங்களது ஆதார் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். 

இதுதொடர்பாக மற்றொரு புலம்பெயர் தொழிலாளி கூறும்போது, எங்களை சொந்த ஊர் அழைத்து செல்வதாக தகவல் அறிந்து இந்த இடத்திற்கு நேற்று மாலை வந்தேன் என்றார். 

நாடு முழுவதும் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், எப்படியாவது அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்பதில் புலம்பெயர் தொழிலாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். 

நேற்றைய தினம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் கூட்டமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை காணமுடிந்தது. அப்போது தானே அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இந்தியாவிலே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 33,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பயை அடுத்துள்ள தானே பகுதியும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 96,000ஐ கடந்துள்ளது. 
 

.