“ஊரடங்கு காலத்தில் பல இடங்களில் சுற்றுச்சூழலில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்"
Washington: வட இந்தியப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று, வட இந்தியப் பகுதிகளை படம் பிடித்துள்ளது. அதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள ஏரோசல் (Aerosol) அளவு வரலாறு காணாத வகையில் குறைவாக உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து நாசாவைச் சேர்ந்த பவன் குப்தா, “ஊரடங்கு காலத்தில் பல இடங்களில் சுற்றுச்சூழலில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வட இந்தியப் பகுதிகளில் இந்த அளவுக்கு ஏரோசல் அளவு குறைவாக நான் பார்த்தது கிடையாது,” என்று கூறுகிறார்.
நாசா தரப்பு மேலும், “இந்தியாவும் உலக நாடுகளும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி பணி செய்ய ஆரம்பித்தாலும், ஒன்றிணைந்து நாம் திட்டத்தோடு செயல்படுவோமேயானால் தொடர்ந்து சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்,” என்கிறது.
ஆகாயத்தில் பயனப்படும் துகள்களில் எப்படி வெளிச்சம் ஊடுருவுகிறது மற்றும் எப்படி எதிரொளிக்கிறது என்பதை வைத்து ஏரோசல் ஆப்டிக்கல் டெப்த் கணக்கிடப்படும்.
இந்த ஆப்டிக்கல் டெப்த், 1 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பகுதியில் இருக்கும் காற்றை சுவாசிப்பது மிக அபாயகரமானது. அதே நேரத்தில் 0.1-க்குக் கீழ் டெப்த் இருந்தால், அந்தப் பகுதியில் காற்று சுத்தமாக இருப்பதாக பொருள்.
ஏரோசல் என்பது, காற்றில் கலந்திருக்கும் திட மற்றும் திரவத் துகள்களின் அளவு. அவை அதிகமாக இருக்கும் இடத்தில் சரியாக பார்வை தெரியாது. மனிதர்களின் நுரையீரல் மற்றும் இதயத்தை அவை பாதிக்கும்.
இந்த ஏரோசல் அளவுதான் தற்போது வட இந்தியப் பகுதிகளில் நன்றாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆம் தேதி வட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்தது. இதனால், ஏரோசல் அளவு குறைந்தது. எப்போதும் மழைக்குப் பிறகு ஏரோசலின் அளவு சுற்றுச்சூழலில் கூடுவது வழக்கம். ஆனால், இந்த முறை தொடர்ந்து அது காற்றில் குறைவாகவே இருந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த ஊரடங்கு காலத்தின்போது தென் இந்தியாவில் ஏரோசல் அளவில் எந்த மாற்றமும் பெரிதாக இல்லை. சொல்லப் போனால், சில காரணங்களால் அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.