This Article is From Apr 13, 2020

ஊரடங்கு நீட்டிப்பு: பல்வேறு தொழில்துறை நடவடிக்கைக்கு அனுமதி வழங்க பரிந்துரை!

வானகம், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், மற்றும் பிற துறைகளில் ஓரளவு உற்பத்தி தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் தொழில்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பல்வேறு தொழில்துறை நடவடிக்கைக்கு அனுமதி வழங்க வர்த்தக அமைச்சகம் பரிந்துரை!

New Delhi:

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், உரிய பாதுகாப்புடன் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. வானகம், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், மற்றும் பிற துறைகளில் ஓரளவு உற்பத்தி தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் தொழில்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 21 நாள் ஊரடங்கு உத்தரவை ஏப்.30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை சரி செய்ய சில துறைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக, வர்த்தக செயலர் குருபிரசாத் மோகபத்ரா எழுதிய கடிதத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டவுடன், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சில தொழில்துறை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த புதிய செயல்பாடுகள், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை கொண்டு சேர்ப்பதற்கும் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அறுவடை செய்வது போன்ற முக்கியமான நடவடிக்கைகளை அனுமதிப்பதற்காக, வேளாண்மை துறை போன்ற பிற அமைச்சகங்கள் உள்துறை அமைச்சகத்தை தனித்தனியாக அணுகுகின்றன என்று நான் கருதுகிறேன். 

பல்வேறு மாநிலங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் அமைச்சகத்துடனான பேச்சுவார்த்தையின்  அடிப்படையில் இந்த பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகலை உறுதிப்படுத்தும் விதமாக குறைவான ஊழியர்களுடன் குறைந்த ஷிப்ட் முறையில் செயல்படுவதற்கு பரிந்துரைப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்னதாகவே, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய பொருளாதாரம் மிக மெதுவாக வேகத்திலே உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், வேலையிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர். 

ஒரே ஷிப்ட் என்ற முறையில், ஆட்டோமொபைல் துறை மற்றும் ஜவுளிதுறை போன்ற பெரும் தொழில்துறைகளை அனுமதிக்க முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், ஏற்றுமதி செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல், தொலைத்தொடர்பு உபகரணங்கள், ஸ்டீல் ஆலைகள், சிமெண்ட், காகிதம், உணவு மற்றும் குளிர் பானங்கள் தயாரிக்கும் தொழில்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சகம் அறிவுறுத்துகிறது. 

கடந்த சனிக்கிழமையன்று, மாநில முதல்வர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனினும், விவசாயம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுடன், சில முக்கியமான தொழில்களை மட்டும் மீண்டும் செயல்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வருமாறு அமைச்சகங்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை வரும் ஏப்.30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 308ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது, 9,152 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

.