This Article is From Apr 14, 2020

உள்ளூர், வெளிநாட்டு விமான சேவை மே 3 வரை ரத்து: அரசு அறிவிப்பு!

முன்னதாக, ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி

உள்ளூர், வெளிநாட்டு விமான சேவை மே 3 வரை ரத்து: அரசு அறிவிப்பு!

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

ஹைலைட்ஸ்

  • 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது
  • இந்நிலையில் மே 3 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இது குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்
New Delhi:

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர், ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“மே 3 ஆம் தேதி, இரவு 11:59 மணி வரை, அனைத்து விமான நிறுவனங்களின் விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது,” என்று விமானப் போக்குவரத்துத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

தற்போது அமலில் உள்ள ஊரடங்கினால், விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விமான நிறுவனங்கள், ஊதியம் கொடுக்காமல் தங்கள் ஊழியர்களை தற்காலிக விடுப்பில் அனுப்பியுள்ளது. 

கடந்த வாரம், சில விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்தன.

இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளில் சிலவற்றை இயக்கலாம் என்ற முடிவில் இருக்கிறோம். அதே நேரத்தில் ஊடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், அதற்கு ஏற்றாற் போல திட்டம் மாறலாம்,” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார். 

ஏப்ரல் 14 வரையே ஊரடங்கு உத்தரவு இருந்ததனால், அதற்குப் பிறகான தேதியிலிருந்து முன்பதிவை அனைத்து விமான நிறுவனங்களும் அனுமதித்திருந்தன. ஏர் இந்தியா விமான நிறுவனம் மட்டும், ஏப்ரல் 30 ஆம் தேதிக்குப் பிறகு முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்தது. 

இந்த ஊரடங்கு காலத்திலும், கார்கோ விமானங்கள், ஹெலிகாப்ட்டர் ஆபரேஷன், மருத்துவ சேவைக்கான விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்போது, பயணச் சீட்டுகளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.