This Article is From Apr 20, 2020

ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் சில நடவடிக்கைகளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்!

Coronavirus COVID-19: ஏப்.20ம் தேதி முதல் மே.3ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டு சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள்
  • சில நடவடிக்கைளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
  • மத்திய அரசு வழிகாட்டுதலின் படியே நடக்க வேண்டும்.
New Delhi:

ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில், சில துறைகள் இன்று முதல் இயங்கலாம் என அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, விலக்கு அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள அந்த கடிதத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் சில நடவடிக்கைகளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சில மாநிலங்கள் தாங்களாகவே ஒருசில அத்தியாவசிய நடவடிக்கைகளுக்குத் தளர்வு விதித்துள்ளது. இதற்கு அனுமதி இல்லை என்றும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை மேற்கோள் காட்டி அவர் கூறியுள்ளார். 

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை விதி 2005ன் கீழ் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் படி, அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளும் அனுமதி வழங்க கூடாது. மத்திய அரசின் எந்தவொரு வழிகாட்டுதலையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, கேரள மாநிலம் இன்று இரண்டு மண்டலங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்தது. மேலும், இன்று முதல் அனைத்து தனியார் வாகனங்களையும் ஒற்றைப்படை - இரட்டைப்படை அடிப்படியில் இயங்கவும், உணவகங்களில் உணவு உண்ணவும் அனுமதி அளித்துள்ளது.


இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறும்போது, ராஜஸ்தானில் ஏப்.20ம் தேதி முதல் மே.3ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், கொரோனா பரவலை முற்றிலும் நிறுத்துவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆனால், அதேநேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, இந்த தொழில்துறை நடவடிக்கைகளின் போது , சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

.