This Article is From May 11, 2020

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்: மத்திய உள்துறை

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை மூடி மருத்துவ பணியாளர்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்: மத்திய உள்துறை

அனைத்து மருத்துவமனைகளும் திறக்கப்படுவதை அனைவராலும் உறுதி செய்யப்பட வேண்டும்

New Delhi:

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவறுத்தியுள்ளது. 

அதேபோல், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சமயத்தில், அனைத்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் மாநிலங்களுக்கு இடையே எளிதாக சென்று வருவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

சுகாதார ஊழியர்களின் இயக்கத்துக்கு சில மாநிலங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களின் சுகாதார சேவைகள் இன்றியமையாதது என்றும், அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் மற்ற மருத்துவ சேவைகளை வழங்குவதில் கடுமையான தடைகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும், அண்டை மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை மூடி மருத்துவ பணியாளர்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

அதனால், இதுபோன்ற அனைத்து மருத்துவ துறை சார்ந்தவர்களின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வது பொது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் அவசியம் என்று உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தனியார் கிளினிக்குகளும், மருத்துவமனைகளும் திறக்கப்படுவதை அனைவராலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்றைய தினம் உரையாற்றியதைத் தொடர்ந்து, உள்துறை செயலாளர் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஊரடங்கு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடந்த மார்ச்.25ம் தேதி தொடங்கியதிலிருந்து ஐந்தாவது முறையாக மாநில முதல்வர்களை பிரதமர் சந்திக்க உள்ளார். இந்த ஆலோசனையின் போது, தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் குறித்து மாநிலங்கள் விவாதிக்க வாய்ப்புள்ளது.

அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபாவுடன் நேற்று நடந்த ஆலோசனையின் போது, பல மாநிலங்கள் சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல அடையாளங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்தன, புலம்பெயர்ந்தோர் திரும்பி வருவதால் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தின் கீழ் வரும்.

அதனால், பல மாநிலங்கள் இயல்புநிலைக்கு திரும்புவதை இது கடினமாக்கும் என்று வாதிட்டன, ஊரடங்கை நீக்க வேறு அளவீடு செய்யப்பட்ட வழியை அவர்கள் விரும்பினர்.

இதனிடையே, உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு மற்றொரு தனி கடிதத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களுக்கு அனுமதி தர வேண்டும், நடந்து செல்பவர்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.