This Article is From May 25, 2020

கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது உள்நாட்டு விமான போக்குவரத்து! முக்கிய தகவல்கள்

Coronavirus Lockdown: அனைத்து பயணிகளும் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை நிறுவ வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Coronavirus Lockdown: விமானங்களில் முகக்கவசங்களுடன் பயணிகள் காணப்படுகின்றனர்.

New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு அறிவித்து, 2 மாதங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் இன்று காலை முதல் துவங்கியுள்ளது. விமான போக்குவரத்துகள் மீண்டும் துவங்கிய நிலையில் நூற்றுக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர் செல்வதற்காகவும், வேலை இடங்களுக்கு செல்வதற்காகவும் விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.

ராணுவ வீரர்கள், மாணவர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் முதல் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளனர். டெல்லிஇயல் இருந்து 4.45 மணி அளவில் புனேவுக்கு முதல் விமானம் புறப்பட்டது. 7.45 மணி அளவில் முதல் விமானம் டெல்லி வந்தடைந்தது. மாநில அரசுகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியதை தொடரந்து, விமான சேவைகள் இன்று மீண்டும் துவங்கியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 1.3 லட்சத்தை ஏட்டியுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவைகளை துவங்குவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்தும் துவங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, மாநிலத்திற்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்து வழிமுறைகளையும் பல மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல்களுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்நாட்டு விமான சேவை துவக்கம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் அறிவித்திருந்தார். அதேபோல், பயணிகளை தனிமைப்படுத்தப்பட தேவையில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தார். 

அனைத்து பயணிகளும் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்றும், தெர்மல் சோதனை மேற்கொள்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

விமான கட்டணங்களும் ரூ.2000 முதல் ரூ.18,600 வரை விமான நேரத்தை பொறுத்து 7 விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதேபோல், டிக்கெட் கட்டணம் அதிகரிக்கும் என்ற காரணத்தால், நடு இருக்கையை காலியாக விடுவது என்ற திட்டத்தையும் கைவிடுவதாக தெரிவித்துள்ளது. 

நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 25 விமானங்களை இயக்க கடைசி நேரத்தில் அம்மாநில அரசு ஒப்புதல் தெரிவித்தது. விமான போக்குவரத்தை துவங்குவதற்கு தங்களுக்கு போதிய அவகாசம் வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். 

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் விமானம் துவங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில் 50,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 13,000ஐ நெருங்கியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 231 ஆக அதிகரித்துள்ளது. எனினும், அறிகுறி இல்லாத பயணிகளை தனிமைப்படுத்தவில்லை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாபில் அறிகுறி இல்லாத பயணிகளை 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலிலும், பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பயணிகளை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலே முதலாவதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட கேரள மாநிலத்தில், விமான பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்திலும் இதேபோல், தனிமைப்படுத்தல் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆம்பன் புயல் சேதம் காரணமாக அங்கு மே.28ம் தேதிக்கு பின்னர் தான் விமான சேவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு விமான பயணிகளை தனிமைப்படுத்த வேண்டிய தேவையில்லை என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பை தொடர்ந்து, முதலாவதாக அதனை அசாம் மாநிலமே ஏற்க மறுத்தது. அதன்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தலை, சரிசமமாக பிரித்து, தனிமைப்படுத்தல் மையங்களில் பாதி நாட்களும், வீட்டில் பாதி நாட்களும் என அசாம் அரசு விதிமுறைகள் மேற்கொண்டுள்ளது. மிசோரம் அரசு அம்மாநிலத்திற்கு வருவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று கூறியதோடு, கட்டாயம் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

.