This Article is From Apr 15, 2020

ஊரடங்கு நெறிமுறைகள்: ஏப்.20ம் தேதிக்கு பிறகு எதற்கெல்லாம் விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு!

2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு நெறிமுறைகள்: ஏப்.20ம் தேதிக்கு பிறகு எதற்கெல்லாம் விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • ஏப்.20ம் தேதிக்கு பிறகு எதற்கெல்லாம் விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு
  • நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுமதி
  • விமானம், ரயில், சாலை போக்குவரத்துகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்படும்.
New Delhi:

பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் ஏப்.20ம் தேதிக்கு பிறகு வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், இ-வணிகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்றைய தினம் உத்தரவிட்டார். எனினும், ஏப்ரல்.20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஏப்.20ம் தேதிக்கு பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள் இல்லாத பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள், மண்டிகள் மூலம் வேளாண் பொருட்கள் கொள்முதல் மற்றும் சந்தை படுத்தல் உள்ளிட்ட வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி.

பால், பால் சார்ந்த பொருட்கள், கோழி, மீன், இறைச்சி சார்ந்த பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேயிலை, காபி மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புற பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், உணவு பதப்படுத்தப்படும் தொழில்கள் உட்பட கிராமப்புறங்கள் சார்ந்த தொழில்கள், நிர்ப்பாசன திட்டங்கள், கட்டிடங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் வெளிமாநில தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயா மக்கள் போக்குரவத்துக்கு தடை தொடரும் என்றும், எனினும் அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி. இதேபோல், நெடுஞ்சாலை உணவகங்கள், வாகன பழுது பார்க்கும் கடைகள், அரசு பணிகளை மேற்கொள்ளும் கால்சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, விமானம், ரயில், சாலை போக்குவரத்துகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்படும். அனைத்து கல்வி நிலையங்கள், பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்க தடை நீடிக்கிறது. இதேபோல், வணிக வளாகங்கள், திரையரங்குகளை திறக்க தடை நீடிக்கிறது. மத கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், உள்ளிட்ட எந்தவொரு பொதுக்கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது. 

.