ஜார்க்கண்ட் முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Lucknow/Patna: உத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்தில் பலியான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களின் சடலங்கள், காயம் அடைந்தவர்களுடன் திறந்த லாரி ஒன்றில் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் அரசு, மனிதாபிமானமற்ற செயலை உத்தரப்பிரதேச அரசு செய்திருப்பதாக கூறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆரேயா என்ற இடத்தில் கடந்த சனிக்கிழலை அதிகாலை சாலை விபத்து ஏற்பட்டது. இதில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 26 பேர் உயிரிழந்தனர். 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களில் 11 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தார்ப்பாலின் பையில் சுருட்டி, திறந்த வெளி லாரியில் உத்தரப்பிரதேச அரசு ஜார்க்கண்ட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதே லாரியில்தான் விபத்தின்போது காயம் அடைந்தவர்களும் வந்துள்ளனர். ஜார்க்கண்டுக்கு செல்லும் வழியில் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டுள்ளன. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
வெளி மாநில தொழிலாளர்களுக்கு மனிதாபிமானம் அற்ற சம்பவம் நடந்திருக்கிறது. சடலங்களை லாரியில் அனுப்பியதை தவிர்த்திருக்கலாம். உத்தரப்பிரதேசம், பீகார் அரசுகள் முறையான ஏற்பாடு செய்து சடலங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சடலங்கள் ஜார்க்கண்ட் எல்லைக்கு வரும்போது அதற்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வாறு ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து லாரியில் இருந்த சடலங்கள் உடனடியாக ஆம்புலன்சுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் ஆட்சியில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. லாரியில் கொண்டு வரப்பட்டதால் சடலங்கள் சிதைந்திருக்கும் என்றும், சடலங்களுடன் செல்ல வேண்டும் என்ற நிலைக்கு காயம் அடைந்தவர்களை தள்ளியது குற்றச் செயல் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஆரேயா மாவட்ட ஆட்சியர் அபிசேக் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.