coronavirus Lockdown: கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஊழியர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கர்நாடகாவில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான அரசு ஆட்சி செய்கிறது
- கடந்த திங்கட் கிழமை கர்நாடகாவில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது
- பெங்களூருவில் மது விற்பனை மிக அதிகமாக நடந்து வருகிறது
Bengaluru: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் 1,600 கோடி ரூபாய் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு. இந்த நிவாரண நிதியானது விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைத்தறி நெசவாளர்கள், பூ வளர்ப்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்துபவர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூ வளர்ப்பவர்களுக்கு, ஒரு ஹெக்டருக்கு 25,000 ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும். துணி துவைப்பவர்கள் மற்றும் முடி திருத்துபவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்கப்படும். அதேபோல ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்கப்பட உள்ளது. கட்டுமானத் துறையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கொடுக்கப்படும். அவர்களுக்கு முன்னதாக 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டது.
“கோவிட்-19 தொற்றானது, விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் நமக்கு சேவை செய்யும் முடி திருத்துபவர்கள், துணி துவைப்பவர்களையும் அதிகமாக பாதித்துள்ளது. அவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் 60,000 துணி துவைப்பவர்கள் பயனடைவார்கள். அதேபோல 2,30,000 முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்,” என்று மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
அதேபோல கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஊழியர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, மேலும் இரண்டு மாதங்கள் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். பெரிய நிறுவனங்களின் மின்சாரக் கட்டணங்கள் இரண்டு மாதங்களுக்கு வசூல் செய்யப்பட மாட்டாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.
கர்நாடகாவில் 3 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பிரிவுக்குக் கீழ் வருகின்றன. இதில் மாநிலத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தலைநகர் பெங்களூருவும் அடங்கும். இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
பெரும் வருவாய் இழப்பில் தவித்து வரும் கர்நாடக அரசு, மாநிலத்தில் மதுபானக் கடைகளை கடந்த திங்கட்கிழமை திறந்தது. இதைத் தொடர்ந்து முதல் நாளில் 45 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றன. இரண்டாவது நாளில் 197 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுள்ளன.