This Article is From May 29, 2020

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்! மம்தா பானர்ஜி அறிவிப்பு

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். நாளை பொது முடக்கம் குறித்த முக்கிய அறிவப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசு அறிவித்துள்ள 4-வது பொதுமுடக்க நீட்டிப்பு மே 31-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

Kolkata:

மேற்கு வங்கத்தில் ஜூன் 1-ம்தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இருப்பினும் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது, கூட்டங்களை நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆன்லைனில் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியதாவது-

கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஜூன் 1-ம்தேதி முதல் திறக்கப்படும். இருப்பினும், 10 பேருக்கு மேல் வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்க அனுமதியில்லை. கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார். இதேபோன்று தேயிலை மற்றும் சணல் தொழிற்சாலைகள் ஜூன் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் பணியை தொடங்கும் என்றும் மம்தா அறிவித்துள்ளார். மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் அனைத்து பணியாளர்களுடன் ஜூன் 1-ம்தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 25-ம்தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. 

ஏற்கனவே இந்தியாவில் 3 பொது முடக்கங்கள் முடிவுக்கு வந்து, தற்போது 4-வது முறையாக மே 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு, பொது முடக்கம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். நாளை பொது முடக்கம் குறித்த முக்கிய அறிவப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.