போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- ஊதியம் கேட்டும், சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கோரியும் போராட்டம்
- ஐதராபாத்தில் 2,600 தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம்
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர்
Hyderabad: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஊதியம் கேட்டும், சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரியும் வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் இந்த போராட்டம் நடந்தது. இதில் அருகேயுள்ள கட்டிடங்களில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது வந்த அதிகாரிகள் தொழிலாளர்கள் மீண்டும் வேலையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் வருவதற்கு முன்பாக இந்த சம்பவங்கள் முடிந்து விட்டன. போலீஸ் ஜீப்பின் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 2,600 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு உணவோ, சம்பளமோ கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
கற்கள் வீசப்பட்டதில் சேதமடைந்த போலீஸ் வாகனம்.
நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வாரம் முதற்கொண்டு கட்டிடத் தொழில்கள் செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. இருப்பினும், தங்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என்று கூறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையை போலீசார் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும் அந்த மாநில அரசுகள் தொழிலாளர்கள் உள்ளே அனுமதிக்காது என்று கூறி, தொழிலாளர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே நாளைக்குள் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை அளிப்பதாக கட்டிட நிறுவனங்கள் தொழிலாளர்கள் உறுதி அளித்துள்ளன.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு விட்டன. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்வோரின் நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 10 கோடி வெளி மாநில தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். நிலைமையை சரி செய்வதற்காக மத்திய அரசு ரூ. 1.70 லட்சம் கோடி அளவுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையாததால், சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.