ஊரடங்கால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகின்றன.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கு நீட்டிப்பால் தொழில் துறைகள் முடங்கியுள்ளன
- வேலையின்மையால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்
- மகாராஷ்டிராவிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு சைக்கிளில் தொழிலாளர்கள் பயணம்
Nagpur (Maharashtra): கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தொழிலாளர்கள் சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்துக்கு சைக்கிள் மூலம் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
ஊரடங்கால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகின்றன.
தொழில் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், வெளி மாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு பணம் இல்லாமல் அல்லல்படும் அவர்கள், சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சைக்கிள் மூலம் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'நாங்கள் நாசிக்கில் இருந்து 5 நாட்களுக்கு முன்பாக பயணத்தை தொடங்கினோம். எங்கள் ஊர் போய்ச்சேருவதற்கு இன்னும் 6 நாட்கள் ஆகும்.
ஏப்ரல் 14-ம்தேதி எங்களது ஊருக்கு திரும்ப பேருந்து வசதிகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.' என்றனர்.
அஞ்சலி என்ற தொழிலாளி கூறும்போது, 'எனது கணவரும் நானும் எங்களது ஒரு வயது குழந்தையுடன் நாக்பூரில் இருந்து சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளோம். மத்தியப் பிரதேசத்தின் சிவ்னிதான் எங்களது சொந்த ஊர். ஏப்ரல் 14-ம்தேதி பேருந்து இயக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஊரடங்கை நீட்டித்து விட்டார்கள். நேற்று நாங்கள் சைக்கிளில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
ஊரடங்கால் வேலையில்லாமல் போனதால், நாட்டின் பல்வேறு நகரங்களில் பணியாற்று வெளி மாநில கூலித் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி புறப்படத் தொடங்கியுள்ளனர்.
ஏப்ரல் 14-ம்தேதி ஊரடங்கு உத்தரவு மே 3-ம்தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவது அதிகரித்துள்ளது.